/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தகிக்கிறது புவி; தவறுகளை நிறுத்துமா, மனித குலம்!
/
தகிக்கிறது புவி; தவறுகளை நிறுத்துமா, மனித குலம்!
ADDED : பிப் 03, 2024 11:42 PM

'காலநிலை மாற்றத்துக்கு, மனிதர்களின் செயல்பாடுகள் மட்டும்தான் காரணம். கடந்த 150 ஆண்டுகளாக செய்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கான காலகட்டத்தில் மனித குலம் உள்ளது,' என, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் பேசினார்.
திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், 'இயற்கை; நாம் கற்றது என்ன?' என்கிற தலைப்பில், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் பேசியதாவது:
கால நிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, கோவிட் போன்ற விலங்கியல் தொற்றுநோய்கள் என மூன்றுவகை பேரிடர்களையும், இன்றைய மனித குலம் ஒருசேர சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 150 ஆண்டுகாலங்களில் மனிதன் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதற்காக, வரலாறு நமக்கு வழங்கியுள்ள வாய்ப்பாக இந்த காலகட்டத்தை பார்க்கவேண்டும்.
இந்த உலகில், கடைசியாக தோன்றிய உயிரினம்தான் மனிதன். மனிதன் இல்லாத உலகிலும் பறவைகள் வாழலாம்; ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் வாழமுடியாது. சாதாரண தேனீக்கள் இல்லையென்றால், நான்கு ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழமுடியாது. 75 சதவீத மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள்தான் உதவுகின்றன. தேனீக்கள் இல்லையென்றால், மனித குலத்துக்கு உணவு கிடைக்காமல்போய்விடும்.
புவி வெப்பம் உயர்வது ஏன்?
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உயிருடன் இருந்த உயிரினங்களும், தாவரங்களும் மரணித்து, மக்கிப்போய்தான், நிலக்கரி, யுரேனியம் என, புதைபடிம எரிபொருளாக உருவாகியுள்ளன. தொழில் புரட்சி என்கிற பெயரில், பூமிக்கு கீழ் இருக்கவேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து எரிக்கிறோம். இதன்விளைவாக, புவியின் வெப்பம் உயர்ந்து, காலநிலையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
சூரியனிலிருந்து வரும் 90 சதவீத வெப்பத்தை, பெருங்கடல்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. பெருங்கடல்களும், காடுகளும் இல்லையென்றால், இந்த உலகம் உயிர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்.
நீடித்த நிலைத்த வளர்ச்சி
மனித இனம் தான் செய்த தவறுகளை, திருத்திக்கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. எந்த ஒரு செயலையும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுதானா என ஆராய்ந்து செய்யவேண்டும். கார்பன் வெளியீட்டில் சமநிலை; நீடித்த நிலைத்த வளர்ச்சி அவசியம்.
நமது மின் உற்பத்தி முறைகளை மாற்றவேண்டும்; சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். பொது போக்குவரத்து அதிகரிக்கவேண்டும். உரம் சார்ந்த உணவு முறை கைவிடப்படவேண்டும். குப்பை மேலாண்மை, நுகர்வுத்தன்மையின் மாற்றங்கள் அவசியம். இதையெல்லாம் செய்தால்தான், இந்த பூமியை பேரழிவுகளில் இருந்து பாதுகாக்கமுடியும். பொருளாதார வளர்ச்சி என்பது, சுற்றுச்சூழலை காவுகொடுத்துவருவதாக இருக்கக்கூடாது.