/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈஸ்டர் கொண்டாட்டம் நள்ளிரவு பிரார்த்தனை
/
ஈஸ்டர் கொண்டாட்டம் நள்ளிரவு பிரார்த்தனை
ADDED : ஏப் 19, 2025 11:30 PM
திருப்பூர்: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை, ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கடந்த மாதம், 5ம் தேதி முதல், தவக்காலம் அனுசரித்தனர்.
தினமும், ஏசுவின் சிலுவைபாடுகளை தியானித்தனர். எளியோருக்கு உணவு வழங்குதல், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட உதவி வழங்குதல் போன்றவை, பக்தர்களின் பங்களிப்புடன், அந்தந்த தேவாலயங்கள் சார்பில் செய்யப்பட்டன.
ஏசுவின் சிலுவைப் பாடுகளை தியானித்து, பாத யாத்திரையும் நடத்தப்பட்டது. பக்தர்கள், கடந்த, 40 நாட்களும் உண்ணா நோன்பிருந்து, தவ முயற்சிகளில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், ஏசு சிலுவையில் அறையுண்டதை, புனித வெள்ளி தினமாக அனுசரித்த பக்தர்கள், நேற்று ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூர்ந்து, ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடினர்.
அனைத்து சர்ச்களிலும், நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. முடிவில், ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏசுவின் உயிர்ப்பு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதற்காக, அனைத்து சர்ச்களும், வண்ண விளக்குகள், கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
திருப்பூரில், குமரன் சாலை, புனித கத்திரீனம்மாள் சர்ச், திருப்பூர் - அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., புனித பவுல் சர்ச், குமார் நகர் புனித ஜோசப், அவிநாசி புனித தோமையார், சேவூர் லுார்து அன்னை சர்ச் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., தேவாலயங்கள் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபை சார்ந்த வழிபாட்டு கூடங்களிலும் ஈஸ்டர் பெருநாள் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

