/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைனலில் ஈஸ்ட்மேன் - ஜி.ஆர். கார்மென்ட்ஸ்
/
பைனலில் ஈஸ்ட்மேன் - ஜி.ஆர். கார்மென்ட்ஸ்
ADDED : நவ 03, 2025 12:26 AM

திருப்பூர்: அப்துல் கலாம் நினைவு சுழற்கோப்பைக்கான நிப்ட் டீ பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர், முதலிபாளையம் நிப்ட் டீ கல்லுாரி மைதானத்தில் அக்., முதல் நடந்து வருகிறது.
'தினமலர்' நாளிதழ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து, நிப்ட் டீ கல்லுாரி கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. நேற்று அரையிறுதிக்கு தேர்வான அணிகளுக்கான போட்டிகள் நடந்தது.
முதல் அரையிறுதி போட்டி, ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங் - குவாலியன்ஸ் இன்டர்நேஷனல் அணிகளுக்கு இடையே நடந்தது. பேட்டிங் செய்த குவாலியன்ஸ் அணி, 17.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 82 ரன் எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய ஈஸ்ட்மேன் அணி, 12.2 ஓவரில், மூன்று விக்கெட் இழந்து, 83 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பேட்ஸ்மேன் அஜித், 12 பந்துகளில், 27 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். பவுலிங்கில் அசத்திய விஜய் நான்கு ஓவர் வீசி, எட்டு ரன் மட்டும் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது அரையிறுதி போட்டி, விக்டஸ் டையிங், ஜி.ஆர். கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் இடையே நடந்தது. விக்டஸ் அணி, 20 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 136 ரன் எடுத்தது.
மகேந்திரமணி, இரண்டு சிக்ஸ், மூன்று பவுண்டரி என, 33 பந்துகளில், 44 ரன் எடுத்து அசத்தினர். இலக்கை விரட்டிய, ஜி.ஆர். கார்மென்ட்ஸ் அணி, 16.2 ஓவரில் ஆறு விக்கெட் இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணியின் பேட்ஸ்மேன், வினீத், 28 பந்துகளில், 36 ரன் எடுத்து, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதிரடியாக ஆடி, 12 பந்துகளில், 27 ரன் எடுத்ததுடன், மூன்று ஓவர் பந்து வீசி, ஒரு விக்கெட் கைப்பற்றிய, ஈஸ்ட்மேன் அணி வீரர் அஜித், நான்கு ஓவர் வீசி, ஒரு மெய்டன், ஒரு விக்கெட் வீழ்த்திய ஜி.ஆர். கார்மென்ட்ஸ் அணி வீரர் சங்கர் ஆகியோர், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டனர்.
வரும், 9ம் தேதி, நிப்ட் டீ பிரிமியர் லீக், அப்துல் கலாம் நினைவு கோப்பையை கைப்பற்ற போகும் அணிக்கான, இறுதி போட்டி நடக்கிறது. ஈஸ்ட்மேன் அணி - ஜி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி பரிசுக்கோப்பையை தட்டிச்செல்லும்.

