/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈஸ்ட்மேன், ராம்ராஜ், டெக்னோ அபார வெற்றி
/
ஈஸ்ட்மேன், ராம்ராஜ், டெக்னோ அபார வெற்றி
ADDED : செப் 08, 2025 06:16 AM

திருப்பூர்; 'நிப்ட்-டீ' தொடரின் நேற்றைய போட்டியில், டெக்னோ ஸ்போர்ட், ராம்ராஜ், ஈஸ்ட்மேன் அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்தின.
அப்துல் கலாம் சுழற்கோப்பைக்கான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், கடந்த ஆக., 9 ம் தேதி முதல், நடைபெற்று வருகிறது.
நிப்ட்-டீ கல்லுாரியுடன், 'தினமலர்' நாளிதழ் மற்றும் டெக்னோ ஸ்போர்ட் இணைந்து, நடத்தப்பட்டுவருகிறது.
பின்னலாடை தொழிலாளர்களை வீரர்களாக கொண்ட, 20 நிறுவன அணிகள் களத்தில் உள்ளன. முதல்கட்டமாக, 15 ஓவருடன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடந்த முதல் போட்டியில், டெக்னோ ஸ்போர்ட் - யுனிசோர்ஸ் டிரென்ட் இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த யுனிசோர்ஸ், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 70 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய டெக்னோ ஸ்போர்ட், 12.1 ஓவரில், 6 விக்கெட் இழந்து, 74 ரன் பெற்று வெற்றியை கைப்பற்றியது.
ராம்ராஜ் காட்டன் அணியுடனான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த, சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 90 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராம்ராஜ் அணி, 11.3 ஓவரில் 94 ரன் எடுத்து, வெற்றியை வசப்படுத்தியது.
மூன்றாவது போட்டியில், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் குளோபல் கிளாத்திங்குக்கு எதிராக பேட்டிங் செய்த காஸ்மோ டெக்ஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 52 ரன் எடுத்தது.
ஈஸ்ட்மேன் அணி , 3.4 ஓவரில், விக்கெட் இழப்பின்றி, 54 ரன் எடுத்து வெற்றியை எளிதாகப் பெற்றது. நான்காவது போட்டியில், எஸ்.என்., எக்ஸ்போர்ட் ஸ்மேஷர்ஸ் - சாகி எக்ஸ்போர்ட் அணிகள் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்.என்., எக்ஸ்போர்ட் அணி தரப்பில் போதிய வீரர்கள் பங்கேற்காததால், சாகி எக்ஸ்போர்ட்ஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டநாயகர்கள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், 25 பந்துக்கு, 25 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் தொடர்ந்த டெக்னோ ஸ்போர்ட் வீரர் கவுதம்; ஒன்பது பந்துக்கு 20 ரன் விளாசி, ஆட்டமிழக்காத ராம்ராஜ் காட்டன் வீரர் அசோக்; 2 ஓவர் பந்து வீசி, 11 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய ஈஸ்ட்மேன் பவுலர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் ஆட்டநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு, காஸ்மோ டெக்ஸ் மேலாளர் கவுரி சங்கர், ஆட்டநாயகன் விருது வழங்கினார்.