/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தர்ப்பூசணியை தைரியமாக சாப்பிடுங்க! தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம்
/
தர்ப்பூசணியை தைரியமாக சாப்பிடுங்க! தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம்
தர்ப்பூசணியை தைரியமாக சாப்பிடுங்க! தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம்
தர்ப்பூசணியை தைரியமாக சாப்பிடுங்க! தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம்
ADDED : மார் 31, 2025 09:59 PM

உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், தர்ப்பூசணி சாகுபடி செய்த வயல்களில், தோட்டக்கலை துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம் வட்டாரம், தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, சின்னப்பன்புதுார், மைவாடி, சங்கராமநல்லூர் கிராமங்களில், ஏறத்தாழ, 200 ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நீர்ச்சத்து அள்ளித்தரும் தர்பூசணி பழங்களை, மக்கள் அதிகளவு விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிலர் தர்ப்பூசணி பழங்களில் சுவைக்காக நிறமிகள் சேர்க்கப்படுவதாகவும், ஊசி செலுத்தி தர்ப்பூசணி பழங்களை பழுக்க வைப்பதாகவும், செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இதனையடுத்து, திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சசிகலா, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தோட்டக்கலைத் துறையினர், நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சாகுபடி வயல்கள், விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள் டன் கணக்கில் இருக்கும் நிலையில், விவசாயிகள் யாரும் தர்ப்பூசணி பழங்களில் நிறமிகளையும், தர்பூசணி பழங்களுக்கு ஊசி செலுத்துவதும் செய்ய முடியாத ஒரு காரியமாகும்.
வயல்களில் நேரடி ஆய்வு செய்து, சுவைத்துப்பார்த்ததிலும், எவ்வித கலப்படமும் இல்லை என, உறுதி செய்யப்பட்டது. விவசாயிகள் யாரும் அவ்வாறு கலப்படம் செய்வதில்லை; வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் உடலுக்கு நன்மை அளிக்கும் தர்ப்பூசணி பழங்களை உண்ணலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.