UPDATED : ஜூலை 16, 2026 09:51 PM
ADDED : ஜூலை 16, 2026 09:12 PM
பல்லடம்:பல்லடம் அருகே, டோல்கேட் பகுதியில், பெட்டி பெட்டியாக கோழி முட்டை கழிவுகள் விதிமுறை மீறி கொட்டப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், மாதப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில், டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ரோட்டோரம், கோழி முட்டை கழிவுகள், பெட்டி பெட்டியாக கொட்டப்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான பெட்டிகள் மற்றும் அட்டைகளில், ஆயிரக்கணக்கான அழுகிய கோழி முட்டை கழிவுகள் வீசப்பட்டுள்ளதால், இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்கின்றன. விதிமுறை மீறி கொட்டப்படும் கழிவுகள், குப்பைகளால் டோல்கேட் பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, விதிமுறை மீறி கோழி முட்டை கழிவுகள் கொட்டியவர்கள் குறித்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
