/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது!
/
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது!
ADDED : மார் 17, 2024 12:04 AM

திருப்பூர்;தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், முதல்வர், முன்னாள் முதல்வர் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன.
இந்தியாவின், 18வது லோக்சபா தேர்தல், ஏழு கட்டமாக நடக்குமென, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்துக்கு, ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வரும், 20 ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது; வேட்பாளர்கள், ஆறு சட்டசபை தொகுதிகளையும் வலம் வந்து பிரசாரம் செய்ய வசதியாக, 18 நாட்கள் பிரசார அவகாசம் கிடைத்துள்ளது.
நேற்று மாலை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடத்தில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அரசு அலுவலகங்களில் மாட்டி வைத்திருந்த, முதல்வர், முன்னாள் முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. சட்டசபை தொகுதி வாரியாக உள்ள, தலைவர் சிலைகளை மூடி வைக்க, தாசில்தார்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், 'டிஜிட்டல்' போர்டுகளில் ஒளிபரப்பு செய்த அரசு சாதனை படக்காட்சிகள் நிறுத்தப்பட்டன; இனி, தேர்தல் விழிப்புணர்வு படக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும்.
மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கிய அரசு வாகனங்கள் இன்று மாலைக்குள் திரும்ப பெற்று, தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான அலுவலக கட்டடங்கள் மூடி, 'சீல்' வைக்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்கள், அரசியல் கட்சி பேனர்கள் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கங்கள், பெட்ரோல் பங்க்குகளில் உள்ள அரசியல் தலைவர் படங்கள் மறைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், 'டிஜிட்டல்' போர்டுகளில் ஒளிபரப்பு செய்த அரசு சாதனை
படக்காட்சிகள் நிறுத்தப்பட்டன
தேர்தல் அவசரம்
பூமிபூஜை நடத்திய பணிகளை தொடர எவ்வித ஆட்சேபனையும் இல்லை; புதிய பணிகள் துவங்கப்பட கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு பயன்படுத்தும் அரசு வாகனங்களில், 'தேர்தல் அவசரம்' என்ற அறிவிப்பு தாள்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், பொது மற்றும் தனியார் கட்டடங்களில் எழுதியுள்ள அரசியல் சுவர் விளம்பரங்களை அழிக்கவும், போஸ்டர்களை அகற்றவும், மறைக்கவும், அந்தந்த கட்சிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பறக்கும்படைகள், நேற்று மாலையில் இருந்து கண்காணிப்பு பணியை துவக்கிவிட்டன. நிலை கண்காணிப்பு குழுக்களின் ஆய்வு இன்று முதல், சட்டசபை தொகுதிகளில் துவங்கும்.

