ADDED : பிப் 26, 2026 05:48 AM

திருப்பூர்: ஒட்டுமொத்த வருவாய்த்துறையினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில், வருவாய் மற்றும் தேர்தல் சார்ந்த பணிகள் முடங்கியுள்ளன.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; ஓய்வூதிய திட்டத்தில் பத்து சதவீதம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும்; அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பவேண்டும் என்பன உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில், தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம், நில அளவையாளர் சங்கம் உள்பட ஏழு சங்கங்களின் கூட்டமைப்புகள் கைகோர்த்துள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில், கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் துணை தாசில்தார், தாசில்தார் நிலையிலான அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்ந்த வருவாய்த்துறையினர் 936 பேர் உள்ளனர். இவர்களில், இரண்டாவது நாளான நேற்று, 890 பேர், 'ஆப்சென்ட்' ஆகி, வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 23ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிவது; ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், இணையதளம் உள்பட போதுமான வசதிகள் உள்ளனவா; மேற்கொள்ளவேண்டிய கட்டமைப்பு வசதிகள் தொடர்பான களப்பணிகளில், வருவாய்த்துறையினரே ஈடுபடுத்தப்படுகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தால், மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தலுக்கு முந்தைய, ஓட்டுச்சாவடிகளை தயார் படுத்தும் பணிகளும் முடங்கியுள்ளன.
சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு: கிராம உதவியாளர், வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரையிலான வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருவாய்த்துறை பணிகள் முடங்கியுள்ளன. இருப்பிடம், வருமானம், சாதி சான்று, பட்டா மாறுதல், நில அளவை உள்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு சான்றுகளுக்காக விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
