ADDED : ஏப் 16, 2026 03:27 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்த்து, வேட்பாளர் விவரங்கள் அடங்கிய 'வாக்கு சீட்டு'களை (பேலட் ஷீட்) இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 19.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆயிரத்து 200 வாக்காளர்களுக்கு ஒன்று என்ற வகையில், 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருபது சதவீதம் கூடுதல் கையிருப்புடன் 3,383 கட்டுப்பாட்டு கருவிகளும்(கன்ட்ரோல் யூனிட்), 3,729 வாக்குப்பதிவு கருவிகளும் (பேலட் யூனிட்) ஒதுக்கப்பட்டுள்ளன. 'யாருக்கு வாக்களித்தோம்' என்பதை உறுதி செய்யும் விவிபேட் கருவிகள் 3,666 தயார் நிலையில் உள்ளன.
திருப்பூர் தெற்கில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்கு மட்டும் ஒவ்வொரு மையத்திலும் இரண்டு வாக்குப்பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கான தாள்கள் இன்று அந்தந்தத் தொகுதி 'பாதுகாப்பு அறை'களில் (ஸ்ட்ராங் ரூம்) வைத்து இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன.
பெங்களூரு 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த 16 பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரங்களில் பழைய மின்கலங்களை அகற்றிவிட்டு புதியவை பொருத்தப்பட்டு, வேட்பாளர் விவரங்கள் விவிபேட் கருவிகளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இப்பணிகள் முடிந்த பின், தேர்தல் நாளான ஏப்ரல் 23-ம் தேதிக்கு முன்னதாக அனைத்து இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
