/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணியூர் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு; குறை கேட்பு கூட்டத்தில் மனு
/
கணியூர் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு; குறை கேட்பு கூட்டத்தில் மனு
கணியூர் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு; குறை கேட்பு கூட்டத்தில் மனு
கணியூர் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு; குறை கேட்பு கூட்டத்தில் மனு
ADDED : அக் 07, 2025 10:44 PM
-- நமது நிருபர் -
மடத்துக்குளம் தாலுகா, கணியூர் பேரூராட்சி, மதியழகன் நகர், காந்தி வீதி பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பயன்பாட்டிலிருந்த சுடுகாட்டை, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் குறைகேட்பு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம் நடந்தது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே, மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டது.
கணியூர் பேரூராட்சி மக்கள் கொடுத்துள்ள மனுவில், 'மடத்துக்குளம் தாலுகா, கணியூர் பேரூராட்சி, மதியழகன் நகர், காந்தி வீதி பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பயன்பாட்டிலிருந்த சுடுகாட்டை, தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அங்கு தென்னை மரங்களை நட்டுவைத்துள்ளார். மூன்று தலைமுறைகளாக பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டை, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தர வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
மீட்டர் கட்டணம் மாறுமா? ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் கொடுத்த மனு:
தமிழகத்தில், பயணியர் ஆட்டோ, சரக்கு ஆட்டோ தொழிலில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.
பன்னாட்டு கால் டாக்ஸி, பைக் டாக்ஸி நிறுவனங்களின் வருகையால், ஆட்டோ டிரைவர்களின் குடும்பங்கள் நலிவடைந்து வருகின்றன.
ஆந்திர அரசு, நலிவடைந்த ஆட்டோ டிரைவர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் ஆட்டோ டிரைவர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.