/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்ஜி., கல்லுாரி தேர்வில் கவனம் அதிமுக்கியம்
/
இன்ஜி., கல்லுாரி தேர்வில் கவனம் அதிமுக்கியம்
ADDED : ஜூலை 07, 2024 11:57 PM

''இன்ஜி., கல்லுாரிகளை முதலில் தரவரிசைப்படுத்தி, விண்ணப்பிக்க ஏதுவாக, வைத்துக் கொள்ள வேண்டும். கல்லுாரி தேர்வில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்'' என்று, அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பூர், வித்யா கார்த்திக் மண்டபத்தில், நேற்று 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் டாக்டர் நாகராஜன் பேசியதாவது:
தமிழக அரசின் www.tneaonline.org என்ற இணையதளத்தை முழுமையாக பார்த்து, படித்து விபரங்களை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த கல்லுாரியை தேர்வு செய்ய போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஒரு கல்லுாரி, ஒரு பாடப்பிரிவு என தேர்வு செய்யாமல், வெவ்வேறு கல்லுாரி, வெவ்வேறு பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
கல்லுாரிகளை முதலில் தரவரிசைப்படுத்தி, கல்லுாரிகள் 'சாய்ஸ்' பட்டியலை நீங்கள் தயாரித்து, விண்ணப்பிக்க ஏதுவாக, வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த அளவில் 'சாய்ஸ்' பதிவு செய்வர்களுக்கு அடுத்தடுத்த கல்லுாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல், அடுத்த சுற்றுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். கல்லுாரி தேர்வில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் தடுமாறாதீர். கவுன்சிலிங்குக்கு 2.06 லட்சம் மாணவர் விண்ணப்பித்துள்ளனர். மூன்று ரவுண்ட்களாக பிரிக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும். ஒவ்வொரு ரவுண்டுக்கும் 'ரேங்க்' அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
கல்லுாரிகள் பாடப்பிரிவை தேர்வு செய்ய, மூன்று நாள் கால அவகாசம் வழங்கப்படும். அவசரப்பட்டு ஒரே நாளில் தேர்வு செய்யாமல், பொறுமையாக, சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அவகாசம் உள்ளதால், மூன்று நாட்களுக்குள் மாற்றம் செய்து கொள்ள விரும்பினாலும், பாடப்பிரிவு கல்லுாரிகளை மாற்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து முடித்து 'லாக்' செய்யும் போது ஓ.டி.பி., பதிவிட மறக்க வேண்டாம்.
இவ்வாறு, நாகராஜன் பேசினார்.