இன்ஜினியர் கனவு நனவாகும் இன்று 'தினமலர்' வழிகாட்டி
இன்ஜினியர் கனவு நனவாகும் இன்று 'தினமலர்' வழிகாட்டி
ADDED : ஜூன் 21, 2026 02:09 AM
திருப்பூர்: பிளஸ் 2 முடித்து இன்ஜினியரிங் படிப்புகளில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்த கல்லுாரியில் என்ன படிப்பில் சேரலாம் என விளக்கும் 'தினமலர்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று (21ம் தேதி) நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் விளக்கம் தருகின்றனர்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில், கோ - ஸ்பான்சராக கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தினர் இணைந்துள்ளனர்.
சந்தேகம் தீரும் பிளஸ் 2 முடித்து, பி.இ., மற்றும் பி.டெக். ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இணையவழி கவுன்சிலிங்கில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், எப்படி கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்வது, எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்தெந்த கல்லுாரியில் என்னென்ன பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு இந்நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
'இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்' எனும் தலைப்பில், இந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண், நவீன தொழில்நுட்ப படிப்புகள் எதிர்காலம், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் முறை ஆகியன குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விளக்குகிறார்.
'தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2026' செயலாளர் டாக்டர் புருேஷாத்தமன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் நேரடி விளக்கம் அளிக்கிறார். குறிப்பாக, ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், 'புரொவிசனல் அலாட்மென்ட்' பெறுதல், இந்தாண்டு கொண்டு வரப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து விளக்குகிறார்.
