/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழல் காக்க சைக்கிள் பயணம்
/
சுற்றுச்சூழல் காக்க சைக்கிள் பயணம்
ADDED : அக் 19, 2024 11:45 PM

'உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்; பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமான வன விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
பெண்கள், சிறுமியர்க்கு எதிரான பாலியன் துன்புறுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்' என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, இலங்கை வவுனியாவில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தர்மலிங்கம் பிரதாபன், 47 இந்தியாவில், 15ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தனது பயணத்தில், 12 ஆயிரத்து 200 கி.மீ., கடந்து, திருப்பூர் வந்த அவரை திருப்பூர் ரோட்டரி கிளப் தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். ரோட்டரி பள்ளி மற்றும் கிட்ஸ் கிளப் பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு கருத்துகளை பகிர்ந்தார்.
திருப்பூர் நஞ்சராயன் குளம் உள்ளிட்ட நகரின் சில இடங்களை பார்வையிட்ட தர்மலிங்கம் பிரதாபன், இலங்கை தமிழில் 'சுகமா இருக்கீங்களா?' என்ற நலம் விசாரிப்புடன் நம்மிடம் பேசினார்.''கடந்த, ஜூன், 24ம் தேதி பயணத்தை துவக்கினேன்; ஆந்திரா, தெலுங்கானா, நாக்பூர், ஒடிசா, கோல்கட்டா.
அசாம், அருணாச்சல் பிரதேசம், பீகார், காசி, ராமர் பிறந்த அயோத்தி, டில்லி, இமயமலை அடிவாரமான ரிஷிகேஷ், மகாபாரத கதையில் இடம் பிடித்த குருேஷத்ரா, ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ம.பி., குஜராத் வழியாக மும்பை கோவா சென்றேன். அங்கிருந்து கேரளா சென்று, தமிழகத்திற்குள் வந்தேன்.
தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் சந்தித்து, எனது கருத்துகளை அவர்களுடன் பகிர்ந்து வருகிறேன். தமிழகத்தில் ரோட்டரி நிறுவனத்தினர் என்னை வரவேற்று, உபசரித்தனர்'' என்றார், ஆர்வத்துடன்.
வீடு போன்று தெரு, ஊரையும் நேசியுங்கள்
'இந்தியாவை மையப்படுத்தி இந்த பயணம் ஏன்?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
உலகின் மிகப்பெரிய நாடு இந்தியா. இந்தியாவை, தற்போது உலக நாடுகள் அனைத்து உற்று நோக்குகின்றன. எனவே, இங்கு நான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், நான் வலியுறுத்தும் கருத்துகள், உலகளவில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையுண்டு.
எனது பயணத்தை என் நாடு உட்பட பிற நாடுகளில் உள்ள இளைஞர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். இதன் மூலம், அவர்களுக்குள்ளும் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் வாய்ப்பும், இயற்கை, சுற்றுச்சூழல் மீது, நேர்மறை எண்ணம் வரக்கூடும்.
இந்தியாவில், சாதாரண பெட்டிக்கடையில் கூட யு.பி.ஐ., பரிவர்த்தனை இருக்கிறது; இதனால், பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் விவசாயம், மரங்கள் நிறைந்துள்ளது. வீதி, தெருக்கள் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பல இடங்களில் வீடுகளை சுத்தமாக வைத்துள்ள மக்கள், தங்கள் வீதி, தெருவோரம் குப்பை போடுவதை பார்க்க முடிகிறது. தங்கள் வீட்டை போன்று தங்கள் வீதி, தெரு, ஊரையும் ஆழ்ந்து நேசிக்கும் போது, அந்த எண்ணம் தானாக வரும்.