ADDED : பிப் 17, 2024 11:53 PM

திருப்பூர்:திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, திறப்பு விழாவுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு தொழிலாளர்களைக் கொண்டது திருப்பூர் மாவட்டம்.
திருப்பூரில் பின்னலாடை தொழிலை நம்பி, 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்; உள்ளூர் மட்டு மின்றி, பிற மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள், இங்கு லட்சக்கணக்கில் உள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. நான்கரை லட்சம் தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ.,க்குப் பணம் கட்டுவதன் வாயிலாக, ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிறது.
இ.எஸ்.ஐ., பங்களிப்பிலும் திருப்பூர், சென்னைக்கு அடுத்த நிலையில் உள்ளதால், திருப்பூரில் தொழிலாளர்கள் நலனுக்கென இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு வர வேண்டும், என்பது தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த, 2019 பிப்., 10ல், சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக திருப்பூருக்கு வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பூலுவபட்டி, பூண்டி ரோட்டில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 84 கோடி ரூபாயில், 100 படுக்கை வசதியுடன் கட்டுமானப் பணி துவங்கியது.
இருப்பினும், கட்டுமானப்பணி, மந்தமாகவே நடந்தது. கடந்த 2022 டிச., மாதம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட வந்த தமிழக அமைச்சர் கணேசன், 2023 அக்டோபர் மாதம், கட்டுமானப் பணி முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறியிருந்தார்.
இருப்பினும், திறப்பு விழா நடத்தப்பட வில்லை. இந்நிலையில், தற்போது கட்டுமானப்பணி முடிந்து, வர்ணம் தீட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூருக்கு, லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கெடுக்க வரும் பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையை திறந்து வைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.