அனைவரிடமும் உள்ளது இறைத்தன்மை! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
அனைவரிடமும் உள்ளது இறைத்தன்மை! குருமகான் பரஞ்ஜோதியார் பேச்சு
ADDED : ஜன 12, 2026 05:35 AM

உடுமலை: 'தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை அனைவரும் உணரும் போது, பிரபஞ்சத்தில் எழும் பிரச்னைகள் முற்றிலுமாக குறையும்,' என குருமகான் பரஞ்ஜோதியார் பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழாவில் பேசினார்.
உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 36வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி நிறைவு விழா நேற்று நடந்தது.
விழாவில், உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் விநாயகம்தலைமை வகித்தார். புதுச்சேரி ஆச்சாரியா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலர் சுந்தரராமன் வரவேற்றார்.
மகாதவ வேள்வியை நிறைவு செய்து, குருமகான் பரஞ்ஜோதியார் பேசியதாவது: உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம், அனைத்து தரப்பினரிடமும் குறைந்து வருகிறது. மனம் விரிவடையும் போது, எண்ணங்கள் அழகாகும். இறைத்தன்மை அனைவரிடமும் உள்ளது; அதை மறந்தது மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாகும். தங்களுக்குள் உள்ள இறைத்தன்மையை அனைவரும் உணர்ந்தால், பிரபஞ்சத்தில் எழும் பிரச்னைகள் முற்றிலுமாக குறையும்.
நமக்கு நாமே மாற்றங்களை கொண்டு வந்தால், முன்னேற்றம் வரும். தனக்குள் உள்ளதை உணர்ந்து, மனதில் மாசு நீக்கி, துாய்மைப்படுத்திக்கொண்டால், இறைத்தன்மை பெருகும். தனிநபரின் மாற்றம், இந்த பிரபஞ்ச மாற்றத்துக்கான முக்கிய காரணமாக அமையும். எண்ணமே பொருளாகிறது. நல்லவர்களாக இருப்பதுடன் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். பாரத தேசம் தற்போது வல்லமை மிக்க நாடாக மாறி வருகிறது.
இந்த வல்லமைமற்றவர்களை அழிப்பதற்காக அல்ல; ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல. அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமையை வளர்க்கவேபாரத தேசத்தின் வல்லமை உதவும். அரசியல் என்பது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
