ADDED : ஏப் 11, 2025 11:51 PM

திருப்பூர்; கட்டுமானப் பணிகள், நிலம் சமன்படுத்துதல், குழி எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் அகழ் இயந்திரங்களுக்கான வாடகையை உயர்த்த வலியுறுத்தி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவற்றின் உரிமையாளர்கள் ஐந்து நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
அவ்வகையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்த மாவட்டங்களில் ஏறத்தாழ, 1.5 லட்சம் அகழ் இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த நான்கு ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை.
விலைவாசி உயர்வு, சம்பளம், எரிபொருள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் உயர்வு காரணமாக வாடகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் போராட்டம் காரணமாக இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐந்து நாள் போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று திருப்பூர் பகுதியில் இந்த வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவிநாசி
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே திருப்பூர் ரோட்டில், அகழ் இயந்திரங்களை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, சேவூர், கருவலுார், பெருமாநல்லுார், தண்ணீர் பந்தல், அம்மாபாளையம், குன்னத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அகழ் இயந்திர உரிமையாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
