தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறுகலான உடுமலை - சின்னார் ரோட்டை விரிவாக்கணும்! திட்டம் இழுபறியால் வாகனங்கள் திணறல்

குறுகலான உடுமலை - சின்னார் ரோட்டை விரிவாக்கணும்! திட்டம் இழுபறியால் வாகனங்கள் திணறல்

குறுகலான உடுமலை - சின்னார் ரோட்டை விரிவாக்கணும்! திட்டம் இழுபறியால் வாகனங்கள் திணறல்


UPDATED : செப் 22, 2026 08:13 PM

ADDED : செப் 22, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 08:13 PM ADDED : செப் 22, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: மறையூரில் இருந்து மருத்துவ தேவைக்கு உடுமலைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும், குறுகலான ரோட்டில் சிக்கி பல மணி நேரம் பரிதவிக்கும் அவல நிலைக்கு, முற்றுப்புள்ளி வைக்க சின்னாறு வரை ரோட்டை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை-மூணாறு ரோட்டில், சின்னாறு வரையிலான 28 கி.மீ., ரோடு நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக வனப்பகுதியில் இந்த ரோடு அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து மறையூர், காந்தலுார், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு இவ்வழித்தடத்தில் அதிகளவு வாகனங்கள் செல்கின்றன.

குறிப்பாக கேரளா மாநிலம் மறையூர் பகுதி மக்கள், மருத்துவ தேவைக்கு உடுமலைக்கே வந்து செல்கின்றனர். இங்கிருந்து காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மறையூருக்கு செல்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்கின்றன.

விலக முடியல! ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு வரை இந்த ரோடு மிக குறுகலாக உள்ளது. மேலும், ரோட்டின் இருபுறங்களிலும், மழைக்காலத்தில் ஏற்பட்ட மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது, ரோட்டோர பள்ளத்தில் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது. வழிவிட்டு விலக இடமில்லாமல் வாகன ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதே போல், சின்னாறு அருகேயுள்ள 'எஸ்' வளைவில், கனரக வாகனங்கள் திரும்ப முடியாது. அவ்வாகனங்கள் அப்பகுதியை கடக்கும் வரை, பிற வாகனங்கள் நீண்ட துாரத்துக்கு அணிவகுத்து நிற்பதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.

விடுமுறை நாட்களில் ஏற்படும் நெரிசலால், வனப்பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல், சுற்றுலா பயணியர் தவிக்கின்றனர்.

தவிக்கும் நோயாளிகள் மறையூரில் இருந்து அனைத்து மருத்துவ தேவைகளுக்கும், உடுமலைக்கே அப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். மறையூர், காந்தலுார், கோடந்துார் பகுதியிலுள்ள பழங்குடியின கிராம மக்களும், இவ்வழியாகவே சமவெளிக்கு வந்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் போது, ஆம்புலன்ஸ் கூட குறித்த நேரத்தில் வர முடிவதில்லை. பரிதவிக்கும் நோயாளிகளை பிற வாகனங்களில் ஏற்றி உடுமலைக்கு அழைத்து வருகின்றனர்.

தற்காலிக தீர்வு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராம்வேல் கூறுகையில், ''மூணாறு ரோட்டில் சின்னாறு வரையிலான பகுதி வனப்பகுதியில் அமைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு, 66 அடி வரை இடமுள்ளதாக ஆவணங்களில் உள்ளது.

அதன்படி விரிவாக்க பணிகளை மேற்கொள்ள, வனத்துறையில் விண்ணப்பித்துள்ளோம். புலிகள் காப்பக பகுதியில், விரிவாக்கம் செய்ய ஒரு ெஹக்டேர் பரப்பை கணக்கிட்டு, ரூ.75 லட்சம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் புலிகள் காப்பக ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். தற்காலிக தீர்வாக ரோட்டோரத்தில் மண் கொட்டி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இரண்டு மணி நேரம்

ஐயப்பன், மறையூர்: மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் மறையூர் மக்கள் உடுமலைக்கு வருகின்றனர். சின்னாறில் இருந்து 20 கி.மீ., தொலைவுள்ள ரோட்டை கடக்க இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிறது. வனப்பகுதியில் பல மணி நேரம் வாகனங்கள் தத்தளிக்கும் போது மக்கள் செய்வதறியாது பாதிக்கின்றனர். தமிழக அரசு சின்னாறு ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். ஜெயமுருகன், மறையூர்: சின்னாறு பகுதியில் நெரிசல் ஏற்படும் போது இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களும், மக்கள் அச்சத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. காய்கறிகளை கொண்டு செல்லும் வாகனங்கள், இவ்வழித்தடத்தில் வர மறுக்கும் அளவுக்கு ரோட்டின் நிலை உள்ளது. இரு மாநில மக்களின் நலன் கருதி, சின்னாறு வரை ரோட்டை விரிவுபடுத்தி எஸ் வளைவு பகுதியை மேம்படுத்த வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us