/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரைமட்ட பாலம் விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
/
தரைமட்ட பாலம் விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 04, 2024 02:03 AM

பல்லடம்;பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலை தவிர்க்க, தரைமட்ட பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் நகரப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையுடன், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இதனால், நகரப் பகுதியில் அளவுக்கு அதிகமான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, நால்ரோடு சிக்னல் பகுதியில், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சிக்னல் அருகே உள்ளதரைமட்ட பாலம் குறுகலாக இருப்பதும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், நால் ரோடு சிக்னலின் இடது மற்றும் வலது புறமாகவும், நேராகவும் செல்கின்றன. வலது புறமாகவும், நேராகவும் செல்லும் வாகனங்கள், சிக்னலுக்காக காத்திருக்கின்றன. இடது புறமாக திரும்ப வேண்டிய வாகனங்களுக்கு, 'ப்ரீ லெப்ட்' இருந்த போதும், போதிய இடம் இன்றி, திரும்ப முடியாமல் நிற்கின்றன.
இதனால், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டில், தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரக் கதியில் வரும் வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இங்குள்ள தரைமட்ட பாலம் குறுகலாக இருப்பதே இதற்கு காரணம்.
தரைமட்ட பாலத்தை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுக்குள் வரும்.
பொதுமக்கள் நீண்ட காலமாக இக்கோரிக்கையை வைத்து வரும் நிலையில், நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. பல்லடத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், தரைமட்ட பாலத்தை விரிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.