/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தளி கால்வாய் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
/
தளி கால்வாய் புதுப்பிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 27, 2025 09:36 PM
உடுமலை; ஏழு குளங்களுக்கு தண்ணீர் செல்லும், தளி கால்வாயை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்துக்குட்பட்ட, செங்குளம், பெரியகுளம் உட்பட குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையிலிருந்து தளி கால்வாய் வழியாகவே, குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது; கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களுக்கும், கால்வாயில் இருந்தே தண்ணீர் செல்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், கான்கிரீட் கரைகள், உடைந்து, பரிதாப நிலையில் உள்ளது. இதனால், அணையிலிருந்து குளங்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகளவு விரயமாகி, நீர் நிர்வாகத்தில், பிரச்னை ஏற்படுகிறது.
திட்டத்தின் கடைக்கோடியில் உள்ள குளங்களுக்கு, போதுமான தண்ணீர் சென்று சேர்வதில்லை; வழியோரத்தில், தண்ணீர் திருட்டும் அதிகளவில், நடக்கிறது.
எனவே, தமிழக அரசு, பொதுப்பணித்துறை வாயிலாக, தளி கால்வாய் புதுப்பிக்க, நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.