/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலை சாகுபடியில் நஷ்டம்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
/
கொண்டைக்கடலை சாகுபடியில் நஷ்டம்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
கொண்டைக்கடலை சாகுபடியில் நஷ்டம்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
கொண்டைக்கடலை சாகுபடியில் நஷ்டம்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 16, 2024 11:30 PM

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு, குறித்த நேரத்தில், பருவமழை பெய்யவில்லை.
இதனால், கொண்டைக்கடலை விதைப்பு தாமதமாக மேற்கொள்ளப்பட்டது. செடியின் வளர்ச்சித்தருணத்தில் மழை பெய்யவில்லை; பூக்கள் விடும் போது பனிப்பொழிவும் இல்லை.
ஆனால், பூ மற்றும் காய்கள் திரட்சி அடையும் போது மழை பெய்தது. பருவம் தவறிய மழையால், செடிகளில், பூக்கள் உதிர்ந்ததுடன், காய்களும் பாதித்தது. இதனால், விளைச்சல் முற்றிலுமாக குறைந்து விட்டது.
வழக்கமாக, இச்சாகுபடியில், ஏக்கருக்கு, 800 - 900 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். இந்தாண்டு, 300 - 400 கிலோ கிடைப்பதே அரிதாகியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை விதைத்த பிறகு, மழை மற்றும் பனிப்பொழிவும் சீராக இருப்பது அவசியமாகும். இந்தாண்டு பருவநிலை மாற்றங்களால், செடிகளில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட மருந்து தெளித்தோம். களையெடுத்தல், அறுவடைக்கும், ஆட்கள் பற்றாக்குறையால், செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது.
ஆனால், விளைச்சல் முற்றிலுமாக குறைந்து விட்டது. ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளோம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடியில், விளைச்சல் குறைந்துள்ளதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தி, தமிழக அரசு மானாவாரி விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.