/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய வாய்ப்புகள் வசமாகும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
/
புதிய வாய்ப்புகள் வசமாகும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
புதிய வாய்ப்புகள் வசமாகும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
புதிய வாய்ப்புகள் வசமாகும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ADDED : அக் 26, 2025 03:00 AM

திருப்பூர்: தற்போதைய வர்த்தக உறவை வலுப்படுத்துவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகளை கவர்ந்திழுக்க மத்திய அரசு வழிகாட்ட வேண்டுமென, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க வரி உயர்வுபிரச்னைக்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில், மாற்று வாய்ப்புகளை ஆராய்வோம் என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி ஆடை தயாரிப்பு சாதனைகளுக்காகவே, ஐரோப்பிய சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஜப்பானின் விதிமுறைகளை ஏற்று ஏற்றுமதி நடந்து வருகிறது; இது மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆப்பிரிக்கா, கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் புதிய வாய்ப்பை உருவாக்கலாம். அதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு பக்கபலமாக நிற்க வேண்டும். தற்போதைய வர்த்தக உறவை வலுப்படுத்துவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகளை கவர்ந்திழுக்க அரசு வழிகாட்ட வேண்டும்.
புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில், 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது, ஏற்றுமதியாளரின் கோரிக்கையாக உள்ளது.
மத்திய அரசு மானிய உதவி தேவை சதாசிவம், பின்னலாடை ஏற்றுமதியாளர்:
புதிய நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்வது என்பது எளிதானது அல்ல; குறிப்பிட்ட நாடுகளில், நாம் சென்று கண்காட்சி நடத்தி, நமது உற்பத்தி திறமைகளை காட்சிப்படுத்த வேண்டும். அதற்கு பிறகே, படிப்படியாக ஆர்டர்களை வரவழைக்க முடியும். மத்திய அரசும், புதியநாடுகளுக்கு சென்று கண்காட்சி நடத்த தகுந்த மானிய உதவி செய்ய வேண்டும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய வாய்ப்புகள் உள்ளன; ஐரோப்பா மொத்தம், 27 நாடுகளை கொண்டது; சில நாடுகளுடன் மட்டும் வர்த்தகம் செய்கிறோம். மீதியுள்ள நாடுகளில், கண்காட்சி நடத்தி, வர்த்தக வாய்ப்புகளை தேட, மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் நடக்கும் கண்காட்சிக்கு சென்று வந்த பிறகு, கட்டணத்தில், 50 சதவீத மானியமாக வழங்கப்பட்டது. அதேபோல், 50 சதவீத மானியம் வழங்கினால், ஏற்றுமதியாளர் புதிய வாய்ப்பை தேடிப்பிடிக்க ஏதுவாக இருக்கும்.
அமெரிக்க ஆர்டரை தக்கவைக்கலாம் விமல்ராஜ், பின்னலாடை ஏற்றுமதியாளர்:
ஆடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, எந்தவொரு நாட்டிலும் புதிதாக நடப்பதில்லை. மற்றொரு நாடு, சந்தைகளை கைப்பற்றி, ஏற்கனவே வர்த்தகம் செய்து கொண்டிருக்கும். அவ்வளவு எளிதாக புதிய மார்க்கெட்டை நாம் சென்று பிடிக்க இயலாது. மார்க்கெட் நிலவரம், அங்கு விற்கப்படும் ஆடைகள் விவரம், அந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்புகளை அறிய வேண்டும். வர்த்தக முகமை உதவியுடன் சென்றால், புதிய வாய்ப்பை பெறலாம்; தன்னிச்சையாக இயலாது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், பரஸ்பரம் மாறிச்சென்று, வாடிக்கையாளரிடம் கூடுதல் விலை குறைப்பு செய்து வருகின்றனர்.
ஐரோப்பியாவின் சில நாடுகள், மிகக்குறைவான அளவு மட்டுமே கொள்முதல் செய்வர். அமெரிக்கா போல, அதிகபட்ச ஆர்டர்கள் கிடைக்காது. அரசு தரப்பில் இருந்து, அமெரிக்க ஆர்டர்களை இழக்காமல், தக்கவைக்க தகுந்த உதவிகளை வழங்க வேண்டும்.

