/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 11.47 சதவீதம் உயர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
/
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 11.47 சதவீதம் உயர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 11.47 சதவீதம் உயர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 11.47 சதவீதம் உயர்வு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
ADDED : நவ 23, 2024 11:05 PM
திருப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது; கடந்த மாதம் மட்டும், 58 ஆயிரத்து, 073 கோடி ரூபாய்க்கு, மொத்த ஏற்றுமதி நடந்துள்ளது, திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தக உறவு, எப்போதும் வலுவாக இருந்து வருகிறது. இறக்குமதியை காட்டிலும், அந்நாட்டுக்கான ஏற்றுமதி அதிகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில், 50 சதவீதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதியில், சீனா, வங்கதேசம் நமக்கு முக்கிய போட்டி நாடுகளாக இருக்கிறது. அந்நாடுகளில் இருந்தும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அதிகம் நடந்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு, அமெரிக்க வர்த்தகர்கள் ஏற்படுத்திய, 'சீனா பிளஸ் ஒன்' என்ற கோட்பாடு, இந்தியாவுக்கு வசந்தத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்கள், நேரில் வந்து, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களை பார்வையிட்டனர். உற்பத்தி படிநிலைகளையும், பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பத்தையும் கண்டு வியந்தனர். அதன்காரணமாக, புதிய வர்த்தக நிறுவனங்களுடன் திருப்பூருக்கு தொடர்பு ஏற்பட்டது; புதிய ஆர்டர்களாகவும் வர்த்தக வாய்ப்பு கிடைத்து வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின், நம் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, ஆயத்த ஆடை உட்பட அனைத்து வகை ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.
கடந்த ஒரு மாதம் மட்டும், அமெரிக்காவுக்கு, 58 ஆயிரத்து, 73 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த, 2023 அக்., மாதம், 52 ஆயிரத்து, 95 கோடிக்கு நடந்துள்ளது; இந்தாண்டு, 11.47 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளுக்கு, 31 ஆயிரத்து, 325 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது; இது, கடந்தாண்டு அக்., மாத ஏற்றுமதியை காட்டிலும், 43.32 சதவீதம் அதிகம். மூன்றாவது இடத்தில் உள்ள நெதர்லாந்துக்கு, 17 ஆயிரத்து ஆறு கோடி ரூபாய் ஏற்றுமதி நடந்துள்ளது; நான்காவது இடத்தில் உள்ள பிரிட்டனுக்கு, 11 ஆயிரத்து, 562 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த 2023 அக்., மாதத்துடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூருக்கான ஏற்றுமதி வர்த்தகம், 197 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 5,705 கோடி ரூபாயாக இருந்த மொத்த ஏற்றுமதி, 11 ஆயிரத்து, 558 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி, 60.41 சதவீதமும், இத்தாலிக்கான மொத்த ஏற்றுமதி, 45.49 சதவீதம் அதிகரித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறுகையில், 'சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட குழப்பத்தால், நமது நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, ஆயத்த ஆடைகள் உட்பட, அமெரிக்காவுக்கான அனைத்து வகை ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டு, திருப்பூர் பனியன் தொழில் வரலாற்றில் புதிய சகாப்தமாக அமையும்,' என்றனர்.

