/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதி முடங்காது! மத்திய அரசு உதவி கைகொடுக்கும்.. ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
/
ஏற்றுமதி முடங்காது! மத்திய அரசு உதவி கைகொடுக்கும்.. ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ஏற்றுமதி முடங்காது! மத்திய அரசு உதவி கைகொடுக்கும்.. ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ஏற்றுமதி முடங்காது! மத்திய அரசு உதவி கைகொடுக்கும்.. ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
ADDED : செப் 07, 2025 10:57 PM

திருப்பூர்: அமெரிக்காவின் வரி உயர்வு காரணமாக திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படுமென்ற அச்சம் ஒருபுறம் நீடித்தாலும், மறுபுறம், ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்காமல் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ''வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு நிச்சயம்; அதுவரை மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்'' என்று கூறுகிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத்தலைவர் சக்திவேல்.
நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 1.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; அவற்றில், 50 சதவீதம் பின்னலாடை ஏற்றுமதி இடம்பெறுகிறது. திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி, கடந்தாண்டில் அதிகரித்தது. திருப்பூரில் இருந்து, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
அத்துடன் சுற்றுப்பகுதிகளில் இயங்கும் ஆலைகளில் இருந்து, கொச்சி, மும்பை துறைமுகம் வாயிலாகவும் ஏற்றுமதியாகியுள்ளது; அதன்படி, நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி, 65 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும், 35 சதவீதம்; பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி, 45 சதவீதம்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு, நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், ஏற்றுமதி வர்த்தகம் முடங்காது; இப்பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறுகிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல்.
அவர் கூறியதாவது:
அமெரிக்க வரி விதிப்பால், ஏற்றுமதி வர்த்தகம் முடங்கிவிடும் என்பது போல் சிலர் திசை திருப்புகின்றனர். அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. அமெரிக்காவுக்கான சீசன் ஏற்றுமதி மட்டும் பாதிக்கும்; அதை எப்படியும் ஈடுகட்டிவிட முடியும்.
இறக்குமதி வரி உயர்வால், அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்; வெகுவிரைவில், பிரச்னைக்கு முடிவு வரும். மத்திய அரசும், தேவையான உதவிகளை செய்ய தயாராகி வருகிறது; மத்திய நிதி அமைச்சரிடம், தேவையான உதவி குறித்து நேரில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வரி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்வரை மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி மேற்கொள்வோருக்கான பாதிப்பை சரிக்கட்ட ஏதுவாக, 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தில், 15 முதல், 20 சதவீதம் வரை மானியம் வழங்கி உதவ வேண்டும்.
அடுத்ததாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தியில் ஆடை தயாரித்து, அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால், அதிகபட்ச வரி விலக்கு வழங்கினாலே, இப்பிரச்னையை சமாளிக்க முடியும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்இதுதொடர்பாக நேரில் விளக்கியுள்ளோம்; மத்திய அரசு விரைந்து அறிவிப்பு செய்தால், ஏற்றுமதி வர்த்தகம் சீராகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இவையெல்லாம் நடக்கட்டும்
* அமெரிக்க மக்களே அதிருப்தியில் இருப்பதால், அமெரிக்க வரிவிதிப்பு பிரச்னைக்கு விரைவில் தீர்வு நிச்சயம்.
* அதுவரை 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தில் மத்திய அரசு 15 முதல் 20 சதவீதம் வரை மானிய உதவி வழங்குதல்.
* அமெரிக்க பருத்தியில் ஆடை தயாரித்து அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் அதிகபட்ச வரிவிலக்கு.
- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ள யோசனைகள்.