/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண் வலி விதை விவசாயிகளுக்கு 'வலி' கொள்முதலில் கொடி கட்டிப்பறக்கும் 'சிண்டிகேட்'
/
கண் வலி விதை விவசாயிகளுக்கு 'வலி' கொள்முதலில் கொடி கட்டிப்பறக்கும் 'சிண்டிகேட்'
கண் வலி விதை விவசாயிகளுக்கு 'வலி' கொள்முதலில் கொடி கட்டிப்பறக்கும் 'சிண்டிகேட்'
கண் வலி விதை விவசாயிகளுக்கு 'வலி' கொள்முதலில் கொடி கட்டிப்பறக்கும் 'சிண்டிகேட்'
ADDED : ஜன 03, 2024 01:05 AM

திருப்பூர்;'செங்காந்தள்', தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், திருப்பூர் மாவட்டம், மூலனுார், தாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் இப்பயிரை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
இதன் கிழங்குகள் மருத்துவ குணமுடையது. எனினும், விதையே பிரதான மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகளில் இருக்கும், 'கொன்ச்சிசைன்' என்ற பொருள் நரம்பு, தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
புற்று நோய்களுக்கான மருந்துகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விவசாயிகள் வேதனை
தமிழ்நாடு கண்வலி விதை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் லிங்கசாமி கூறியதாவது:
மருத்துவ பயன் நிறைந்த கண்வலிக்கிழங்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த விதைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஒரே அறுவடையில் உற்பத்தி செய்யப்படும் கண்வலிக் கிழங்கு விதைக்கு சீரான விலை இல்லை.
கடந்த, மூன்று மாதங்கள் முன், கிலோ 1,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனை நம்பி விவசாயிகள் பலர் தங்கள் விதையை விற்று விட்டனர். அதே அறுவடையில் இருப்பு வைத்திருந்தவர்களின் விதை 3,200 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் விலையை குறைத்துவிட்டனர். விவசாயிகள் கடன் பெற்று இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சீரான விலை இல்லாததால், பலரும் விவசாயத்தை விட்டு தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர்.
விலை நிர்ணயம் தேவை
இந்த விதைகள், இரண்டு, மூன்று ஆண்டுகள் தாங்கும் திறன் கொண்டவை. ஆண்டுதோறும் விவசாயிகள் பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு இடையே தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க வேண்டும். பொருளீட்டு கடன் வழங்க வேண்டும். கொப்பரையை போல் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களும் 'சிண்டிகேட்' அமைத்து கொள்வதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் நிர்ணயம் செய்வது தான் விலை.
இதனை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிலோ குறைந்தபட்சமாக, 3 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். கிலோவுக்கு ஒரு விவசாயி, 1,700 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கிறார். எனவே, விவசாயிகளின் நலனை கருதி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.
தேர்தலின் போது, இந்த விதையை அரசேகொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை நிறைவேற்றி தரவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.