/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணிக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது!: மூலப்பொருள் விலை உயர்வால் திடீர் முடிவு
/
துணிக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது!: மூலப்பொருள் விலை உயர்வால் திடீர் முடிவு
துணிக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது!: மூலப்பொருள் விலை உயர்வால் திடீர் முடிவு
துணிக்கு சாயமிட கிலோவுக்கு 20 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது!: மூலப்பொருள் விலை உயர்வால் திடீர் முடிவு
ADDED : மார் 11, 2026 05:04 AM

திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை, 30 சதவீதம் வரை திடீரென உயர்ந்துள்ளதால், உற்பத்தி கட்டணம், கிலோவுக்கு, 20 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரி உயர்வால் ஏற்றுமதி வர்த்தகமும், இறக்குமதியும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருந்து மீண்டு வருவதற்குள், ஈரான் - இஸ்ரேல் போர் மூண்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி பாதித்து, அவைசார்ந்த மூலப்பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கி வரும், தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 450 சாய ஆலைகளின் இயக்கம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த 10 நாட்களுக்குள், மூலப்பொருட்கள் விலை 10 முதல், 40 சதவீதம் உயர்ந்துள்ளதால், சிறு, குறு ஆலைகள் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இக்கட்டான நிலையை சமாளிக்க, சாயமிடும் கட்டணத்தி ல், 20 சதவீதத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக, சாய ஆலைகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் காந்திராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுசெயலாளர் முருகசாமி, பொருளாளர் மாதேஸ்வரன், துணை தலைவர்கள் பக்தவத்சலம், ஈஸ்வரன், இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் குறித்து, சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால், கச்சா எண்ணெய் வரத்து தடைபட்டுள்ளது. இதனால், சாய ஆலைகளின் முக்கிய மூலப்பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதுதவிர, உடனுக்குடன் பணம் செலுத்தி மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் சாய ஆலைகள் தொடர்ந்து இயங்க, உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும், எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ைஹட்ரஜன் பெராக்சைடு, அசிடிக் ஆசிட், காஸ்டிக், சோடா ஆஷ், சாயம், காஸ் விலை ஆகியனவும், 'ஸ்டீம்' பயன்பாட்டுக்கான விறகு விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதேபோல், பொது சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தும், சல்பூரிக் ஆசிட், காஸ்டிக், நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. மின் கட்டணம், யூனிட் 6.25 ரூபாயாக இருந்தது, 9.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இத்தகைய பாதிப்புகளை சமாளிக்க, சாயமிடும் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டண உயர்வு 'லைட்' கலர் மற்றும் பிளீச்சிங் கட்டணத்தில், கிலோவுக்கு 10 ரூபாயும், 'மீடியம்' கலருக்கு 15 ரூபாயும், 'டார்க்' கலர்களுக்கு 20 ரூபாயும் விலை உயர்த்த வேண்டியுள்ளது.
நடைமுறை கட்டணத்தில் இருந்து, தற்காலிகமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். பிரச்னை தீர்ந்த பின், கட்டணத்தை குறைக்க ஆவன செய்யப்படும். ஆடை உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

