ரயில்வே ஸ்டேஷனில் சரக்குகளை கையாள... வசதிகள் தேவை!: தொழில்கள் மேம்பட ரயில்வேக்கு கோரிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் சரக்குகளை கையாள... வசதிகள் தேவை!: தொழில்கள் மேம்பட ரயில்வேக்கு கோரிக்கை
UPDATED : ஆக 24, 2026 04:04 AM
ADDED : ஆக 23, 2026 04:51 PM

உடுமலை: உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர். திண்டுக்கல்-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள், 2015ல் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து துவங்கியது.
அப்பணிகளுக்காக, 2009ல், ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் வரை, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாளும் வசதி இருந்தது. அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பின், மீண்டும் இத்தகைய சேவைகள் துவக்கப்படவில்லை.
தொழில்களுக்கு உதவும் உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயமும், அது சார்ந்த பல்வேறு தொழில்களும், அதிகளவு உள்ளன. விவசாயத்துக்கு தேவையான யூரியா உட்பட பல்வேறு உரங்கள், சென்னை மற்றும் துாத்துக்குடியிலிருந்து, பெறப்பட்டு வருகிறது.
இதே போல், இப்பகுதியில், கறிக்கோழி மற்றும் முட்டை கோழி வளர்ப்பு தொழில் அதிகளவு உள்ளது. இப்பண்ணைகளுக்கு தேவையான, தீவன உற்பத்திக்கு, மக்காச்சோளம், சோயா போன்ற பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்படுகிறது.
இத்தகைய மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கு, அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், 50க்கும் மேற்பட்ட நுாற்பாலைகளும், திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையில், அதிகளவு காகித ஆலைகளும் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளுக்கு, மூலப்பொருள் மற்றும் உற்பத்தி பொருள், சாலை போக்குவரத்து வழியாகவே பெறப்படுகிறது.
தொழில்கள் மேம்பாட்டுக்காக, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், பார்சல் சர்வீஸ் மற்றும் சரக்கு கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடனான முனையம் அமைக்கப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வே நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து மதுரை ரயில்வே மண்டல மேலாளருக்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
அதில், சரக்கு கையாளும் வசதியை, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் ஏற்படுத்தினால், ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, மூலப்பொருளை எளிதாக கொண்டு வர முடியும் என்பதால், தொழிற்சாலைகளும், அது சார்ந்த வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
