/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய வாக்காளர் சேர்க்கை ஆட்சேபனை தெரிவிக்க வசதி
/
புதிய வாக்காளர் சேர்க்கை ஆட்சேபனை தெரிவிக்க வசதி
ADDED : நவ 10, 2024 04:43 AM
திருப்பூர் : நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் பெயர் நீக்கவும், புதிய வாக்காளர் பெயர் சேர்க்க ஆட்சேபனை தெரிவிக்கவும், 'படிவம் -7' மூலமாக விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் துவங்கியுள்ளன.
தொழிலாளர் மற்றும் மாணவர்கள் வசதிக்காக, வரும் 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில், மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
ஓட்டுச்சாவடி வாரியாக நடக்கும் சிறப்பு முகாமில், வாக்காளர் பங்கேற்று, தங்களது குடும்ப வாக்காளர் விவரம் சரியாக பதிவாகியுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், புதிய வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம், திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
வரும் 2025 செப்., 30ம் தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், தற்போதே பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்; அவர்கள் பெயர், அடுத்த வரைவு பட்டியலில் சேர்த்து வெளியிடப்படும்.
முன்னதாக, ஜன., 1 ம் தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தியான நபர்களும் (படிவம் -6) விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க, படிவம் -6 'பி' ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். இறந்த வாக்காளர், நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்களை நீக்க, படிவம் -7 வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பதிவு திருத்தம் செய்வது, முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை பெறுவதற்கு, மாற்றத்திறனாளி வாக்காளர் என்பதை பதிவு செய்ய, படிவம் - 8 மூலமாக விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமல்ல, புதிய வாக்காளர் பெயர் சேர்க்க ஆட்சேபனை தெரிவிக்கவும், படிவம் -7 மூலமாக விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'புதிதாக பெயர் சேர்க்க மட்டும் படிவம் -6ல் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே வாக்காளராக உள்ளவர், இந்தியாவின் வேறு எந்த தொகுதிக்கு மாறவும், படிவம் - 8 ல் விண்ணப்பித்தால் போதும்.
புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், மற்றவர்கள் 'படிவம் -7' மூலமாக விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்ற வாக்காளர்கள் குறித்து, சரியான ஆதாரம் இருந்தால், பெயர் நீக்கவும், படிவம் - 7 வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாய்ப்பை பயன்படுத்தி, செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, பொதுமக்கள் உதவிட வேண்டும்,' என்றனர்.