/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பிக்கை மடல்! புதிய எஸ்.பி., மீது எதிர்பார்ப்புகள்
/
நம்பிக்கை மடல்! புதிய எஸ்.பி., மீது எதிர்பார்ப்புகள்
நம்பிக்கை மடல்! புதிய எஸ்.பி., மீது எதிர்பார்ப்புகள்
நம்பிக்கை மடல்! புதிய எஸ்.பி., மீது எதிர்பார்ப்புகள்
ADDED : ஜன 29, 2024 12:10 AM

திருப்பூர் மாவட்ட புது எஸ்.பி.,யா பொறுப்பேத்திருக்கற அபிேஷக் குப்தா அய்யாவுக்கு...
ஒரு சாமானியனோட லெட்டருங்...
நம்ம மாவட்டம் அமைதிக்கு பேர் போனதுங்.. ஆனா... இப்பப் பாருங்... எங்க பார்த்தாலும், சட்ட விரோதமா மது விக்கறாங்... ஒரு நம்பர் லாட்டரி... சீட்டாட்டம்... சேவல் சண்டை, கஞ்சான்னு களைகட்டுதுங். போலீஸ் ஆதரவு தர்றதுனாலதான் இதெல்லாம் கொடிகட்டிப் பறக்குதுன்னு எங்களுக்கே தெரியுதுங்.
அடிதடி, பணம் - கொடுக்கல் வாங்கல் புகார்னா, கட்டப்பஞ்சாயத்து பக்காவா நடக்குதுங்...
ஒரு தலைபட்சமா நடவடிக்கை எடுக்கறாங்... கறைபடிந்த போலீசுக்காரங்க லகரங்களை வாரிக் குவிக்கிறாங்... ஸ்டேஷன்லயே நங்கூரம் பாய்ச்சுன மாதிரி ஒரே கிடைல இருக்கறாங். சி.எஸ்.ஆர்., போட்டதோட புகாரை மூடி மறைச்சுடறாங்... எஸ்.பி., ஆபீசுக்கே புகார் போறதில்லீங்...
அமராவதி ஆத்த ஒட்டி, உடுமலை, தாராபுரம் பகுதில மணல் கொள்ளை, காங்கயம், ஊதியூர், குண்டடம், பல்லடம் போன்ற இடத்துல கிராவல் மண் திருட்டுன்னு தினமும் அராஜகம் நடக்குதுங். போலீஸ் கம்முன்னு இருக்கறாங்.
ரெண்டொரு மாசத்துல நடந்த சம்பவங்களைப் பார்த்தா உங்களுக்கே பகீர்னு இருக்குமுங்!
போன செப்டம்பர் மாசம், பல்லடம் கள்ளக்கிணறு பகுதில, நாலு பேரை கொடூரமா வெட்டிக்கொன்னுட்டாங்... தமிழகம் பூரா ஒரே பரபரப்பாயிருச்சுங்... கட்சிக்காரங்க எல்லாரும் கண்டனம் தெரிவிச்சாங்க தெரியுமுங்களா!
போன மாசம் அவிநாசி டி.எஸ்.பி.,யோட டிரைவர், அதிகாரியோட சொந்த வேலைக்காக ஆட்டோவில போனப்ப, விருதுநகர்கிட்ட ஏக்சிடண்ட் ஆகி இறந்துபோயிட்டாருங்... முறையா, எஸ்.பி., விசாரிச்சு நடவடிக்கை எடுக்கோணுமுன்னு கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கூட சொல்லிட்டே இருந்தாங்... எங்கீங்க... ஒரு நடவடிக்கையும் இல்லீங்.
தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பொண்ண சமீபத்துல ஆணவக்கொலை செஞ்சிட்டாங். அவர் வேறொரு சமூக வாலிபரை காதலிச்சு கல்யாணம் பண்ணீட்டாருங்களாமா...
அவுங்க விருப்பத்துக்கு மாறா பெத்தவங்களோட பல்லடம் போலீஸ் அனுப்பிட்டாங். அதனால இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செஞ்சிட்டாங்.
ரெண்டொரு நாள் முன்னாடி 'டிவி' நிருபர் ஒருத்தரை பங்க்கில் வச்சு, கொடூரமா வெட்டிட்டாங்...
இந்த மாதிரி சம்பவம் எல்லாம் கட்டுப்படோணும். இதுதா எங்களோட ஆசையுங். அமைதி திரும்போணுங்... உங்களத்தாங்க நாங்க நம்பியிருக்கோம்... நல்லது செய்வீங்கதானே!
நன்றி, வணக்கமுங்!
நடவடிக்கைக்கு உறுதி
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா கூறியதாவது:
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்கு, சட்டம்-ஒழுங்கு, குற்ற சம்பவங்களை தடுத்தல் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தப்படும். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.