ADDED : செப் 08, 2025 11:16 PM

திருப்பூர்; பெருமாநல்லுார் - குன்னத்துார் சாலையில், எஸ்.கே.என்., கிளினிக் செயல்பாடு மீது, மருத்துவப்பணிகள் துறையினருக்கு புகார் வந்தது.
அதனடிப்படையில், மாவட்ட மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் கண்ணன் மகராஜன் தலைமையில், அவிநாசி அரசு மருத்துவமனை டாக்டர் பத்மநாபன், அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 'ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத விக்ரம் மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்த புஷ்பா ஆகியோர் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
தன்னிடம் வரும் நோயாளிகளை பரிசோதிக்கும் விக்ரம், நோய் குறித்த விவரத்தை நிம்மி என்பவருக்கு தெரியப்படுத்தி, அவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரை, ஊசி மருந்தை, புஷ்பா வாயிலாக நோயாளிகளுக்கு செலுத்தி வந்துள்ளார்' என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், நிம்மி என்பவரை அவரது மொபைல் போனில், மருத்துவ அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனையடுத்து, தாசில்தார் முன்னிலையில், கிளினிக்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
நிம்மி என்பவர், கல்வித்தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்ததாக, ஏற்கனவே, மார்ச், 28ம் தேதி, தட்டான்குட்டை பகுதியில் மருத்துவ துறையினரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.