ADDED : ஜன 19, 2026 05:47 AM

திருப்பூர்: திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 19வது 'இசை அமுதம்' நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது.
மூன்றாவது நாளான நேற்று, சித்ஸ்ரீராம் பாடல் நிகழ்ச்சி நடந்தது. பாஸ்கர் - வயலின், பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம், ஸ்ரீசுந்தர்குமாரின் கஞ்சிரா பக்கவாத்திய இசையுடன், சித்ஸ்ரீராம் பல்வேறு பாடல்களை, அம்சமான ராகங்களில் பாடினார்.
தோடி ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் இன்னிசை பாடல் நிகழ்ச்சி துவங்கியது. ஆபோகி ராகத்தில் அமைந்த, ''சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா..' என்ற பாடல்; பஹூதாரி ராகத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய 'ப்ரோவபாரமா' என்ற பாடல்; 'சுகுணுமுலே…' என்ற சக்ரவாஹம் ராகத்தில் அமைந்ததியாகராஜர் இயற்றிய பாடல்; 'த்விஜாவந்தி' ராகத்தில் அமைந்த அகிலாண்டேஸ்வரி… என்ற பாடல், முருகர்பாடல் என, பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன.
திரளான மக்கள் பங்கேற்று இன்னிசை பாடல்களை மெய்மறந்து கேட்டு ரசித்தனர்.
ஏற்பாடுகளை, ஷண்முகானந்த சங்கீதசபா தலைவர் ராமநாதன், துணைத்தலைவர் தனஞ்செயன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், இணை செயலாளர் திருமேனி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
