ADDED : டிச 09, 2024 07:19 AM

திருப்பூர், : திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 18ம் ஆண்டு 'இசை அமுதம் -2024' நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது.
முதல் நாள், சென்னை கோமல் தியேட்டர் குழுவினரின், திரவுபதி மேடை நாடகம் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, குருவாயூர் கங்கா சசிதரனின், வயலின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
முத்துக்குளம் ஸ்ரீராக் - மிருதங்கம், திருப்புனித்துரா ஸ்ரீகுமார் - தவில், மாஞ்சூர் உன்னிகிருஷ்ணன் -கடம் இசையுடன், கங்கா சசிதரனின் வயலின் இன்னிசை களைகட்டியது. எம்.எஸ். சுப்புலட்சுமி விருது பெற்ற கங்கா சசிதரன் இன்னிசை நிகழ்ச்சியை, இசை பிரியர்கள் மெய் மறந்து ரசித்தனர்.
முதலில், ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த, 'வாதாபி கணபதிம்...' என்ற பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. பைரவி ராகத்தில் அமைந்த ஸ்வரஜதி, 10 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது. நவரச கானடா ராகத்தில், 'நின்னு வினா நாம தந்து' என்ற பாடல் இசைக்கப்பட்டது. அடுத்ததாக, பவுளி ராகத்தில் கோபால பாலம் இசை மீட்டப்பட்டது.
பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான, 'எந்தரோ மஹானு பாவுலு...' என்ற பாடலும், 'ஆபேரி' ராகத்தில், 'நகுமோமு...' என்ற கீர்த்தனைகளுக்கு, பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பல்வேறு ராகங்களில், அபூர்வமான ஸ்வரஜதி, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஷண்முகானந்த சங்கீதா சபா தலைவர் ஆடிட்டர் ராமநாதன், செயலாளர் ஆடிட்டர் செந்தில்குமார், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் குழுவினர் செய்திருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், 'பெஸ்ட் ஸ்டிச்' சுரேஷ், ஹார்வி மண்டப அறங்காவலர் கிருஷ்ணகுமார், டி.எம்.எப்., மருத்துவமனை டாக்டர் ஜெயகிருஷ்ணன், திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.