/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்டுப்பன்றிகளால் கதறும் விவசாயிகள்; தீர்வு காண வலியுறுத்தல்
/
காட்டுப்பன்றிகளால் கதறும் விவசாயிகள்; தீர்வு காண வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளால் கதறும் விவசாயிகள்; தீர்வு காண வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளால் கதறும் விவசாயிகள்; தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2025 08:51 PM

உடுமலை; உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், பயிர்களை நாசம் செய்வதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருணா தலைமை வகித்தார். அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில் விவசாயிகள் பேசியதாவது:
காட்டுப்பன்றிகள் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதம் ஏற்படுத்தி வரும் நிலையில், மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
வனத்திலிருந்து, 40 கி.மீ., துாரம் உள்ள கிராமங்களிலும், வசித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த பல போராட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
மக்காச்சோளம், தென்னை, காய்கறி என அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வரும் நிலையில், இழப்பீடும் வழங்காமல், கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து, வனத்துறை அலட்சியம் காட்டி வருகிறது. விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
வேளாண் பொறியியல் துறை சார்பில், கிணறுகளுக்கு பாம்பேரி (சுற்றுச்சுவர்) அமைக்க மானியம், மழை நீர் சேகரிப்பு என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. இத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள், விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை.
திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்கள் இயக்கம் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த தொழிலாளர்கள் நியமித்துள்ள, முறையாக திட்டங்கள் செயல்படாததால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, ஏராளமான விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், உடனடியாக வழங்க வேண்டும்.
மலைவாழ் மக்களுக்கு, விதை, உரம், இடு பொருட்கள் வழங்கவும், எலையமுத்துார் பகுதியில் தனியார் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டும்.
வனத்திற்குள், மொட்டையாற்றின் குறுக்கே வனத்துறை செக்டேம் கட்டியுள்ளதால், கோடந்துாரில் விவசாயம் செய்ய முடியவில்லை. கோடந்துார் வன உரிமைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கையெழுத்து இல்லாமல், வனத்துறையினர் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.
கோவில் நிலங்களில், சீமைக்கருவேல மரங்கள் காடாக மாறி, ஆபத்தான நிலையில் உள்ளன. அதனை பயன்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும். ஊராட்சிகளிலுள்ள ரிசர்வ் சைட்களை மீட்க வேண்டும்.
உடுமலை பசுபதி வீதியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையால், விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். அகற்ற வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் சர்வே துறையில், முறையாக அளவீடு செய்து தராமலும், பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டு இழுத்தடித்து வருகின்றனர்.
கண்ணமநாயக்கனுாரில், 6 ஏக்கர் குட்டை ஆக்கிரமிப்பு அகற்றாமல், ஆறு ஆண்டாக இழுபறியாகி வருகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோட்ட மங்கலம் குளத்திற்கு வரும் நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பால், நீர் வரத்தின்றி குளம் வறண்டு காணப்படுகிறது.
நீர் நிலைகளை மீட்க வேண்டும். இடிந்து விழும் நிலையிலுள்ள சிக்கனுாத்து கால்நடை கிளை நிலையத்தை, புதிதாக கட்ட வேண்டும்.
விருகல்பட்டி ஊராட்சி, வல்லக்குண்டாபுரத்தில், விநாயகர் கோவில் வீதி ஆக்கிரமிக்கப்பட்டு,பொது வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது; ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.இவ்வாறு, பேசினர்.