/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் திணறல் அரசின் மானிய திட்டங்கள் எதிர்பார்ப்பு
/
சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் திணறல் அரசின் மானிய திட்டங்கள் எதிர்பார்ப்பு
சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் திணறல் அரசின் மானிய திட்டங்கள் எதிர்பார்ப்பு
சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் திணறல் அரசின் மானிய திட்டங்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 15, 2025 11:39 PM

உடுமலை,; விளைநிலமே பூச்சூடியது போல பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், சூரியகாந்தி சாகுபடி, விவசாயிகளுக்கு மட்டும், பல்வேறு சவால்களை தருகிறது. முக்கிய எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, அரசு உதவ வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
உடுமலை கணபதிபாளையம், ராகல்பாவி, உரல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்து வந்தனர். பல்வேறு காரணங்கள் இச்சாகுபடி அரிதாகி, விளைநிலங்களில், சூரியகாந்தியை பார்ப்பதே ஆச்சரியமாகி விட்டது.
ஜன., பிப் மாதங்களில், வீரிய ரக விதைகளை நடவு செய்கின்றனர்; ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஆயிரம் செடிகள் இருக்கும் வகையில், பராமரிக்கின்றனர். நோய்த்தாக்குதல் குறைவாக இருந்தாலும், பூக்களில் விதைகள் பிடித்த பிறகே பிரச்னை துவங்குகிறது.
இத்தருணத்தில், கிளி உள்ளிட்ட பல்வேறு பறவைகள், சூரியகாந்தி விளைநிலங்களை முற்றுகையிட்டு, சேதப்படுத்துகின்றன.
பூக்களை சுற்றிலும் வலை கட்டுதல், காலை, மாலை வேளைகளில், பட்டாசு வெடித்தல், கண்ணாடிகளை தொங்க விட்டு, சூரிய ஒளியை பிரதிபலிக்க செய்வது என பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இருப்பினும், பூக்களை முழுமையாக காப்பாற்ற முடிவதில்லை.
விவசாயிகள் கூறியதாவது:
சூரியகாந்தி சாகுபடியில், அதிக மகசூல் கிடைக்க அயல் மகரந்த சேர்க்கை முக்கியமானதாகும். பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு தோட்டங்களை சுற்றிலும், தேனீ பெட்டிகளை வைப்பது வழக்கம். அதிக சாகுபடி பரப்பு இருக்கும் போது, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
தற்போது குறைந்த பரப்பில் மேற்கொள்வதால், தேனீ பெட்டி வைக்கும் நடைமுறையை பின்பற்ற முடியவில்லை. இதனால், மகரந்த சேர்க்கை பாதித்து மகசூல் குறைகிறது. அறுவடை தருணத்தின் போது, பறவைகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது.
இவ்வாறு, பல போராட்டங்களுக்கு பிறகு விளைவித்தாலும், சந்தை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. போதிய விலை கிடைப்பதில்லை. சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர் சாகுபடியில் நஷ்டம் தவிர்க்க, அரசு மானியத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.