/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சிபில் ஸ்கோர்' நடைமுறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
/
'சிபில் ஸ்கோர்' நடைமுறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
'சிபில் ஸ்கோர்' நடைமுறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
'சிபில் ஸ்கோர்' நடைமுறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
ADDED : ஜூலை 19, 2025 12:20 AM
பல்லடம்: வங்கியில் கடன் பெற, 'சிபில் ஸ்கோர்' கட்டாயம் என்ற அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அதனை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களில் இருந்து விவசாயிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு, சிபில் ஸ்கோர் கட்டாயம் என்ற சுற்றறிக்கையை கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் நந்தகுமார், கடந்த மாதம் சுற்றறிக்கை வெளியிட்டார்.
இதற்கு அனைத்து விவசாய சங்கங்கள் உட்பட, அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, சிபில் ஸ்கோர் தேவையில்லை; சிபில் ரிப்போர்ட் பார்த்தால் போதும் என உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டது.
இதில், எந்தவித வேறுபாடும் இல்லை என்பதால், மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்பட்டது.
இவ்வாறு, தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு பின்னும், நேற்று முன்தினம், மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. அதில், சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என்றும், பயிர் கடன் பெற வேண்டுமானால், என்.ஓ.சி., வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது.
கூட்டுறவு சங்க மாநில பதிவாளரின் இந்த நடவடிக்கை, தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. தமிழக அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் கூட்டுறவு சங்க மாநில பதிவாளரை பணி நீக்கம் செய்வதுடன், அனைத்து சுற்றறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.