/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீண்ட கால பயிர்களை தவிர்க்கும் விவசாயிகள்
/
நீண்ட கால பயிர்களை தவிர்க்கும் விவசாயிகள்
ADDED : மார் 20, 2024 12:12 AM
பல்லடம்;பல்லடம் வட்டார பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், பெரும்பாலான விவசாயிகள், நீண்டகால பயிர்கள் சாகுபடி செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
பல்லடம் வட்டாரத்தில், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் பிரதானமாக உள்ளன. காய்கறி பயிர்கள் உட்பட, தென்னை, வாழை, சப்போட்டா, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
காய்கறி பயிர்களுக்கு போதிய விலை கிடைக்காதது மற்றும் கூலித் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், பெரும்பாலான விவசாயிகள், தென்னை சாகுபடியில் பரவலாக ஈடுபட்டனர். இதனால், பல்லடம், பொங்கலுார், சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், தென்னை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது.
சமீப நாட்களாக நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழைகள் பொய்த்ததே இதற்கு காரணம்.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. தென்னை வாழை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களுக்கு, தண்ணீர் தேவை என்பதால், விவசாயிகள், நீண்ட கால பயிர்களை தவிர்த்து வருகின்றனர்.
இதையடுத்து, வெங்காயம், தக்காளி, மக்காச் சோளம், காலிபிளவர், மிளகாய் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை சாகு படி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல்லடம் வட்டார விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், தற்போது, தண்ணீர் இன்றி வறட்சி நிலவுகிறது. போதிய தண்ணீர் இன்றி தென்னைகள் காய்ந்து கருகி வருகின்றன. இவற்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால், தக்காளி வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்கிறோம்.
இவற்றுக்கு, சொட்டுநீர் பாசனத்தில் குறுகிய பாசன வசதி இருந்தால் போதுமானது என்பதால், நீண்ட கால பயிர்களை தவிர்க்கிறோம். நடப்பு ஆண்டு மழை பெய்தால் தான் தென்னை மரங்கள் தப்பிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

