/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
/
தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
ADDED : பிப் 02, 2025 01:08 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையத்தில், தொட்டிக்கரி ஆலை இயங்கி வருகிறது.
முறையான அனுமதி பெறாமல், விதிமுறை மீறி இந்த ஆலை செயல்பட்டு வருவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.
சில மாதங்களாக, ஆலை மூடப்பட்டிருந்தது. ஆலை நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கலாம் என, ஐகோர்ட் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஆலை இயங்க துவங்கியது. தகவல் அறிந்த இப்பகுதி விவசாயிகள், நேற்று மதியம், பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், 'திடீரென ஆலை இயங்கியது எப்படி? மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றப்படாமலும், ஊராட்சி நிர்வாக அனுமதி பெறாமலும் ஆலை எவ்வாறு இயங்கலாம்.
எனவே, ஆலையின் இயக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,' என்றனர்.
விவசாயிகளிடம் பேச்சு நடத்திய தாசில்தார் ஜீவா கூறுகையில், ''தொட்டிக்கரி ஆலை நிர்வாகம் ஐகோர்ட் உத்தரவு பெற்றுள்ளனர். கோர்ட் உத்தரவை மீறி ஆலையை நிறுத்துவது கோர்ட் அவமதிப்பு செயல்.
இதன்படி, ஊராட்சி நிர்வாக அனுமதி பெற்று ஆலை செயல்படுவதை தடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டரீதியாக தான் நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்,'' என்றார்.
இதனை தொடர்ந்து, ஆலோசித்து முடிவு செய்து கொள்வதாக கூறி விவசாயிகள் கலைந்து சென்றனர்.