/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எருமையுடன் வந்து போராட முயற்சி: விவசாயிகளால் திருப்பூரில் பரபரப்பு
/
எருமையுடன் வந்து போராட முயற்சி: விவசாயிகளால் திருப்பூரில் பரபரப்பு
எருமையுடன் வந்து போராட முயற்சி: விவசாயிகளால் திருப்பூரில் பரபரப்பு
எருமையுடன் வந்து போராட முயற்சி: விவசாயிகளால் திருப்பூரில் பரபரப்பு
ADDED : மார் 27, 2025 04:24 AM

திருப்பூர் : மூன்று ஆண்டுகளாக ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததை கண்டித்து, எருமை மாட்டுடன் எமதர்மன் வேடம் அணிந்து பாடை கட்டும் போராட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரின் பிரதான சாலைகளான தாராபுரம் ரோட்டையும், பல்லடம் ரோட்டையும் இணைக்கும் முக்கியமான வழித்தடமாக வீரபாண்டி - கோவில் வழி ரோடு உள்ளது.
வாக்குவாதம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு புதியதாக அமைக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே மாநகராட்சி குடிநீர் குழாய் அமைப்பதற்காக ரோட்டின் ஒருபகுதி தோண்டப்பட்டது. மூன்று ஆண்டுகளாகியும், ரோடு சீரமைக்கப்படாமல், 20 அடி அகல ரோட்டில் பாதியை காணவில்லை. அய்யம்பாளையம் நால் ரோடு முதல் 3 கோவில் வழி வரை, ரோட்டின் ஒரு பகுதி பெயர்ந்து, மண் ரோடாகவும், குண்டும், குழியாகவும், ஜல்லி கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது.
ரோட்டின் மோசமான நிலையை கண்டித்தும், உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், எமன் பாசக்கயிறு வீசி, பாடை கட்டும் நுாதன போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தகவலறிந்த மாநகராட்சி நிர்வாகம், இரவோடு இரவாக, ரோடு சீரமைப்பு பணிகளை துவக்கியது. இருப்பினும், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வீரபாண்டி - கோல் வழி ரோட்டில், பூங்கா நகர் அருகே திரண்டனர். சரக்கு ஆட்டோவில் எருமையும் கொண்டு வரப்பட்டது.
இதை பார்த்த வீரபாண்டி போலீசார், சரக்கு ஆட்டோவுடன் எருமையை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டி வருமாறு டிரைவரிடம் கூறினர். இதனால், விவசாய சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிகாரிகள் பேச்சு
அதன் பின், எருமையை, முத்தணம்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு போலீசார் கூட்டி சென்றனர். அதன்பின், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதில் பேசிய அதிகாரிகள், உடனடியாக சாலை பணிகளை துவக்குவதாக கூறினர். அதன்படி, பொக்லைன் வரவழைக்கப்பட்டு, ரோடு சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. பத்து நாட்களுக்குள் ரோடு பணி முடிக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.