/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; 'கடமை'க்காக நடத்துவதாக வேதனை
/
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; 'கடமை'க்காக நடத்துவதாக வேதனை
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; 'கடமை'க்காக நடத்துவதாக வேதனை
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; 'கடமை'க்காக நடத்துவதாக வேதனை
ADDED : ஆக 20, 2025 01:13 AM

திருப்பூர்; திருப்பூர் வருவாய் கோட்ட அளவில் கடமைக்காக மட்டுமே குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவதால், ஐந்து தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருப்பூரில், மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலும், கோட்டாட்சியர் தலைமையில், அந்தந்த வருவாய் கோட்ட அளவிலும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களுடன் திருப்பூர் வருவாய் கோட்டம் செயல்படுகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய மற்றும் மாநகர பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கோட்டத்தில், சில மாதங்களாகவே, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் சரிவர நடைபெறுவதில்லை.
கூட்ட அரங்கம் சீரமைப்பு பணிகளை காரணம்காட்டி, கடந்த ஏப்., மற்றும் மே மாதத்தில் குறைகேட்பு கூட்டம் நடத்தவில்லை. ஜூலை மாதம், முதல்வர் வருகை அறிவிக்கப்பட்டு, பின் ரத்தானது. ஆனால், முதல்வர் வருகையை காரணம் காட்டி, ஜூலையிலும் கூட்டத்தை ரத்து யெ்துவிட்டனர். இம்மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடத்தப்பட்டது. காலை, 10:00 மணி முதலே, விவசாயிகள் மனுக்களோடு, கூட்ட அரங்கினுள் அமரத்துவங்கினர்.
ஊத்துக்குளி, புதுப்பாளையத்தில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், போராட்டம் நடந்த பகுதிக்கு சென்று விட்டார். அதனால், நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் கோட்டாட்சியர் பங்கேற்கவில்லை. இதனால், அவரின் நேர்முக உதவியாளர் நந்தகோபால், குறைகேட்பு கூட்டத்தை நடத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், 'குப்பை பிரச்னையை மாநகராட்சி அதிகாரிகள் எதிர்கொள்ளட்டும். குறைகேட்பு கூட்டத்தை வைத்துக்கொண்டு, ஆர்.டி.ஓ., அங்கு சென்றால், விவசாயிகளாகிய நாங்கள், எங்கள் பிரச்னைகளை யாரிடம் முறையிடுவது. மாதம் ஒருநாள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அதனையும் சரிவர நடத்தாவிட்டால் என்ன செய்வது,' என கொந்தளித்தனர்.
இதனால், நந்தகோபால், விவசாயிகளை சமாதானப்படுத்தி, கூட்டத்தை நடத்தினார். நேற்றைய கூட்டத்தில், ஐந்து தாசில்தார்களும் பங்கேற்கவில்லை. அடுத்த நிலை அதிகாரிகளே பங்கேற்றிருந்தனர். அதுமட்டுமின்றி, மொத்தம் 45 அரசு அலுவலர்கள் பங்கேற்க வேண்டியநிலையில், வெறும் 18 அலுவலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் அளித்த பல மனுக்களுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய தீர்வு காணவில்லை; சரியான பதிலும் அளிக்கவில்லை. குறைகேட்பு கூட்டத்திலும், அம்மனுவில் குறிப்பிட்டுள்ள பிரச்னை தொடர்பாக பதிலளிக்க, துறை சார்ந்த அலுவலர்கள் யாருமில்லை. குறிப்பாக, மின்வாரியம், கால்நடைத்துறை, வட்டார போக்குவரத்து, பொதுப்பணித்துறை, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்ந்த, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆளில்லாத நிலையே காணப்பட்டது.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி, சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணசாமி, சரவணன் ஆகியோர் பேசியதாவது:
விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டத்தில், பெரும்பாலான அரசு அலுவலர்கள் பங்கேற்பதில்லை. மனுக்களுக்கும் சரியான நடவடிக்கையும் எடுப்பதில்லை; மழுப்பல் பதிலேயே தருகின்றனர். கோட்ட அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்துவதே அர்த்தமற்றதாகி வருகிறது. தாமதமாக வரும் அலுவலர்களை கூட்ட அரங்கினுள் அனுமதிக்க கூடாது. கூட்டத்துக்கு வராத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
வரும் மாதங்களில், கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை, அனைத்து துறை அலுவலர்களுடன், ஆர்.டி.ஓ., தலைமையில் முறையாக நடத்தவேண்டும். இல்லாவிடி், கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவில் நடத்தப்படும் குறைகேட்பு கூட்டம் மட்டும் போதும். கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை முற்றிலுமாக நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு ஆவேசமாக பேசினர்.
மின்வாரியம், கால்நடைத்துறை, வட்டார போக்குவரத்து, பொதுப்பணித்துறை, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்ந்த, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆளில்லாத நிலையே காணப்பட்டது