/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
/
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
அனல் தெறித்த போராட்ட களத்தில் அமைதி அரசாணைக்கு வித்திட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள்
ADDED : மார் 21, 2025 02:01 AM
'அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்ற பழமொழிக்கேற்ப, விவசாயிகளின் ஒருமித்த குரலும், தொடர் அழுத்தமும், அரசாங்கத்தை அசைத்து பார்த்திருக்கிறது. ஆம்... இது, தெரு நாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு அறிவித்த விவகாரத்தில் தான்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில், கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோர் அதிகம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகும் தெரு நாய்கள், பட்டிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடுகள், பண்ணைகளில் வைக்கப்பட்டுள்ள கோழிகளை கடிப்பதை, வழக்கமாக்கி கொண்டன.
கொத்து கொத்தாக பலி
நாய்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு, ஆடு, கோழிகள் கொத்து கொத்தாக பலியாகின. 2024 மே மாதம், வெள்ளகோவில் பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர், முதன் முறையாக இப்பிரச்னையை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 'நாய்கள் கடித்து இறக்கும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, கிழக்கு, சென்னிமலை உள்ளிட்ட இடங்களிலும் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆடு, கோழி உள்ளிட்டவை பலியாகின. இதனால், கடந்த, ஜன., 26ல் நடந்த கிராம சபையில், இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகளால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை, 17க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இணைந்த கைகள்
இறந்த கால்நடைகளுடன் அந்தந்த பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் முன் முற்றுகை, தர்ணா, காத்திருப்பு போராட்டம் என, அடுத்தடுத்த போராட்டங்களை பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னெடுக்க, பல்வேறு விவசாய சங்கத்தினரும் களமிறங்கினர். தெருநாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட நிலையில், இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் விடாப்பிடியாக போராட்டக் களத்தை வலுப்படுத்தினர். ஒரு கட்டத்தில், போராட்ட களத்தில் இருந்த விவசாயிகளை, வலுக்கட்டாயமாக கலைக்கும் சூழலும் ஏற்பட்டது.
விளைவு, இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றது. பா.ஜ., - கம்யூ., - நாம் தமிழர் கட்சி என பல்வேறு கட்சியினரும் இவ்விவகாரம் குறித்து பேசத் துவங்கினர். தொடர் அழுத்தம் காரணமாக, இழப்பீடு தொடர்பான பரிந்துரையை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். எம்.எல்.ஏ., ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் சட்டசபையில் பேசினர்.
உணர்ந்தது அரசு
இவ்வாறு, தெரு நாய்களால் கால்நடைகள் பலியாகும் விவகாரம், மாநில மற்றும் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 'நாய்கள் கடித்து இறக்கும் மாடுகளுக்கு, 37,500, ஆடுகளுக்கு, 4,000, கோழிகளுக்கு, 100 ரூபாய் இழப்பீடு வழங்கும் அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஆடுகளுக்கான இழப்பீடு தொகை, 6,000, கோழிகளுக்கு, 200 உயர்த்தி வழங்குவது தொடர்பான அரசாணை விரைவில் வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'திருப்பூர் வெள்ளக்கோவிலில், சிறு பொறியாக கிளம்பிய இழப்பீடு கோரிக்கை, அனைத்து விவசாய சங்கத்தினரின் ஆதரவால், ஒட்டு மொத்த தமிழகத்துக்குமான அரசாணையாக வெளியாக காரணமாகி உள்ளது.
இதனால், போராட்டத்தை கைவிடுகிறோம். இருப்பினும், இழப்பீடு தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கின்றனர் பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தினர்.