/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் உற்பத்தி நிறுவனம் அபாரம்; 3.50 கோடி ரூபாய் இலக்கு!
/
உழவர் உற்பத்தி நிறுவனம் அபாரம்; 3.50 கோடி ரூபாய் இலக்கு!
உழவர் உற்பத்தி நிறுவனம் அபாரம்; 3.50 கோடி ரூபாய் இலக்கு!
உழவர் உற்பத்தி நிறுவனம் அபாரம்; 3.50 கோடி ரூபாய் இலக்கு!
ADDED : செப் 25, 2024 12:19 AM

பல்லடம் : பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:
மத்திய அரசு திட்டத்தின் கீழ், கோவை 'ஈஷா அவுட் ரீச்' அமைப்பின் வழிகாட்டுதலுடன், நபார்டு வங்கி நிதி உதவியை பெற்று, 2023 மார்ச்சில், தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கப்பட்டது. 444 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதில், தற்போது, 750 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேங்காய், இளநீர், வாழை மற்றும் காய்கறி பயிர்கள் உள்ளிட்டவை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, தேவைப்படும் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் கிடைப்பதுடன், மொத்த வியாபாரிகளுக்கும் குறைந்த விலைக்கு பொருள் கிடைக்கிறது.
நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு, இலவச மண்பரிசோதனை, இயற்கை வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை பயிற்சி, நுண்ணுயிர் காப்பு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சிறந்த செயல்பாடு கருதி, சமீபத்தில் மாநில விருது வழங்கப்பட்டது. சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் என, நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்நிறுவனத்தில் இணையலாம்.
முதல் அரையாண்டு, 1.58 கோடி ரூபாய்க்கும், இரண்டாம் அரையாண்டு, 2.54 கோடி ரூபாய்க்கும் பரிவர்த்தனை நடந்துள்ளது. நடப்பு ஆண்டு, 3.50 கோடி ரூபாய் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.