/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாறும் ஓடைகள் விவசாயிகள் வேதனை
/
குப்பை கிடங்காக மாறும் ஓடைகள் விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 09, 2025 11:27 PM
உடுமலை,; உப்பாறு அணையின் நீர்பிடிப்பு ஓடைகள், கழிவுகள் கொட்டுமிடமாக மாற்றப்பட்டு, மாசடைந்துள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில், உப்பாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, மழை நீர் ஓடைகள், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லை கிராமங்களில் அமைந்துள்ளன.
குறிப்பாக, குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 20க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள், ஒருங்கிணைந்து, உப்பாறு ஓடையாக மாறி, அணையுடன் சேர்கிறது.
இந்நிலையில், இந்த மழை நீர் ஓடைகள் முறையாக பராமரிக்கப்படாமல், சீமை கருவேல மரங்கள் முளைத்து, மண் மேடாக மாறி மாயமாகி வருகிறது.
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து வகையான கழிவுகளும், இந்த ஓடைகளில் கொட்டப்படுகிறது.
குறிப்பாக, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி, பெரியபட்டி, குடிமங்கலம் வறட்டாறு, ஏழாற்றுபள்ளம் உள்ளிட்ட ஓடைகளில், இறைச்சிக்கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள தடுப்பணைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைவது தொடர்கதையாகியுள்ளது.
ஓடையில் கொட்டப்படும் கழிவுகளால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர், பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
இது குறித்து, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: உப்பாறு நீர்பிடிப்பு ஓடைகள் கழிவுகளின் கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியின் ஒரே நீராதாரமாக உள்ள ஓடைகள் இவ்வாறு பரிதாப நிலைக்கு மாறி வருவது வேதனையளிக்கிறது.
இது குறித்து அரசுக்கு பல முறை புகார் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசுத்துறைகளின் அலட்சியம் வேதனையளிப்பதாக உள்ளது.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.