/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழாகும் பாசன நீர் ; விவசாயிகள் வேதனை
/
பாழாகும் பாசன நீர் ; விவசாயிகள் வேதனை
ADDED : ஜூலை 04, 2025 12:37 AM

பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் பி.ஏ.பி., நீரை, விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு பெரிதும் நம்பியுள்ளனர்.
தண்ணீர் திருட்டு, கசிவு, வாய்க்கால் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடைமடை விவசாயிகளுக்கு பாசன நீர் முறையாக சென்று சேர்வதில்லை.
பல்லடம் அடுத்த, அல்லாளபுரம்- - பொல்லிக்காளிபாளையம் ரோட்டில், பி.ஏ.பி., பிரதான மற்றும் கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. இவை, விவசாய நிலங்களுக்கு செல்வது மட்டுமின்றி, ரோட்டிலும் பாதையிலும் வழிந்தோடி வீணாகி வருகிறது. பாசன நீர், ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்பதால், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ரோடு, சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வண்டி, வாகனங்கள் செல்லும் மண் பாதையில், ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பி.ஏ.பி., பாசன வசதியே இல்லாத பகுதிகளில், எங்களுக்கும் தண்ணீர் கிடைத்து விடாதா என, எண்ணற்ற விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். இச்சூழலில், ரோட்டிலும், பாதையிலும் வழிந்தோடி பாசன நீர் பாழாகி வருவது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது.
தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.