/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் விற்பனை;விவசாயிகள் அதிருப்தி
/
தண்ணீர் விற்பனை;விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 12, 2025 12:44 AM
பொங்கலுார்; பி.ஏ.பி., வாய்க்காலில் சமீபத்தில் மூன்றாம் மண்டல பாசனம் நிறைவு பெற்றுள்ளது. பி.ஏ.பி., தண்ணீர் பாய்ந்த பகுதிக்கு அடுத்து இரண்டு ஆண்டு கழித்துத் தான் தண்ணீர் திறந்து விடப்படும்.
இதனால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை. எனவே, விவசாயிகள் கிடைத்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பாய்ச்சினால் விரைவில் ஆவி ஆகும் என்பதால் அருகில் உள்ள குளம், குட்டைகளில் தேக்கி வைக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகள் நிரம்புகின்றன. ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், குடிப்பதற்கும், கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீர் இருப்பில் இருக்கும்.
அவ்வகையில், திருப்பூர் அருகே உள்ள அல்லாளபுரம் குட்டையில் அப்பகுதி விவசாயிகள் பி.ஏ.பி., தண்ணீரை நிரப்பி வைத்ததால், நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அருகில் உள்ள சிலர் விவசாயக் கிணற்றிலிருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீரை இறைத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் விரைவில் சரிந்து, அப்பகுதியே வறண்டு பாலைவனம் போல் ஆகிவிடும் ஆபத்து உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீர் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பு.