/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு உழவர் சந்தை 'குளம்' ஆனது காகித கப்பல் விட்ட விவசாயிகள்
/
தெற்கு உழவர் சந்தை 'குளம்' ஆனது காகித கப்பல் விட்ட விவசாயிகள்
தெற்கு உழவர் சந்தை 'குளம்' ஆனது காகித கப்பல் விட்ட விவசாயிகள்
தெற்கு உழவர் சந்தை 'குளம்' ஆனது காகித கப்பல் விட்ட விவசாயிகள்
ADDED : ஏப் 05, 2025 11:00 PM

திருப்பூர்: தெற்கு உழவர் சந்தை அருகே தேங்கும் மழைநீரை அகற்றக்கோரி, கப்பல் விடும் போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தை, மாநகராட்சி இடத்தில் செயல்பட்டு வருகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகளும், ஆயிரக்கணக்கான மக்களும், வந்து செல்கின்றனர். தமிழகத்திலேயே, அதிக மதிப்பிலான காய்கறிகள், தெற்கு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை வளாகத்தின் முன்பகுதி குண்டும், குழியுமாக இருக்கிறது.
இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் தேங்கி நின்று, வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருப்பூரில் கனமழை பெய்ததால், உழவர் சந்தை வளாகத்தில், அதிக அளவு தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது.
காய்கறிகளுடன் நேற்று அதிகாலை வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். உழவர் சந்தை வளாகத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால் வசதி இல்லை.
உடனுக்குடன் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கக்கோரியும், தண்ணீரில் கப்பல்விடும் போராட்டம் நடத்தினர். பலமுறை முறையிட்டும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கப்பல் விடும் போராட்டம் நடத்துவதாகவும், இப்போராட்டம் தீவிரமாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். போலீசாரும், உழவர் சந்தை அலுவலர்களும் சமாதானம் செய்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.