/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரச்னைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்
/
பிரச்னைகளை கொட்டித்தீர்த்த விவசாயிகள்
ADDED : ஏப் 26, 2025 12:17 AM
திருப்பூர்: விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் பிரச்னைகளை நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் கொட்டித்தீர்த்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், கோரிக்கைகளை குறிப்பிட்டு மனு அளித்தனர். விவசாயிகள் பேசியதாவது:
நுாறு நாள் திட்டத்தில்
விவசாய பணி
மவுனகுருசாமி, மாநில செயலாளர், கிஷான் மோக்ஷா:
குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் நீர் இருப்பு குறைந்துவருகிறது. குளம், குட்டைகளை துார்வாரவேண்டும். உடுமலையில் ஓடைகளை துார்வாரி, சீமை கருவேல மரங்களை அகற்றவேண்டும். பிளாஸ்டிக் உள்பட மக்காத குப்பைகளை அகற்றவேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுகிறது. நுாறு நாள் திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும்.
மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மகசூல் குறைகிறது. அதிக மகசூல் தரும் மக்காச்சோள விதைகளை வழங்கவேண்டும்.
மின் இணைப்பு
தெளிவு தேவை
காளிமுத்து, தலைவர், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:
தாராபுரம் பகுதி விவசாயிகள் வட்டிக்கு கடன் பெற்று, மின் இணைப்புக்காக பணம் செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
சட்டசபை மானிய கோரிக்கையில், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதா; அல்லது 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்து பெறும் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதா என, அரசு தெளிவுபடுத்தவேண்டும்.
தென் மேற்கு பருவ காற்று காலம் துவங்க உள்ளது. அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படும் என்பதால், தென்னை மரங்களை ஒட்டிச்செல்லும் மின் கம்பிகளை உடனடியாக மாற்றி அமைக்கவேண்டும்.
மின் அதிகாரிகள்
பங்கேற்க வேண்டும்
ஞானபிரகாசம், தலைவர், தென்னை விவசாயிகள் சங்கம்:
உடுமலை மின்பகிர்மான வட்டம், பெதப்பம்பட்டி, ராமச்சந்திராபுரம், வி.வேலுார் மின் பகிர்மான உதவி பொறியாளர்கள், கோவை மாவட்டத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளதால், திருப்பூரில் நடைபெற உள்ள குறைகேட்பு கூட்டத்தில் அந்த அதிகாரிகளை பங்கேற்கச் செய்யவேண்டும்.
இவ்வாறு, விவசாயிகளின் பிரச்னைகளை குறிப்பிட்டு, விவசாய சங்க பிரதிநிதிகள் விரிவாக பேசினர்.
120 மனுக்கள்
நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து, மொத்தம் 120 மனுக்கள் பெறப்பட்டன.
முந்தைய குறைகேட்பு கூட்டங்களில் துறை சார்ந்த அதிகாரிகளால் உரிய பதில் அளிக்கப்படாமலும், தீர்வு காணப்படாமலும், 46 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விரைந்து பதிலளிக்கவேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களை டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
---
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.