/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளால் அச்சம் வனத்துறை அலட்சியம்
/
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளால் அச்சம் வனத்துறை அலட்சியம்
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளால் அச்சம் வனத்துறை அலட்சியம்
அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகளால் அச்சம் வனத்துறை அலட்சியம்
ADDED : டிச 06, 2025 05:05 AM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள அமராவதி ஆற்றுப்பகுதிகளில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், முதலைகள் அதிகளவு காணப்படுகின்றன. அவற்றை பிடிக்க வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை துவங்கி, கரூர் காவிரி ஆற்றில் திருமுக்கூடலுார் வரை, 148 கி.மீ., துாரம் அமராவதி ஆறு அமைந்துள்ளது.
அணைக்கு நீர் வரத்து முக்கிய ஆறுகளான, சின்னாறு, தேனாறு, பாம்பாறு இணையும் கூட்டாறு பகுதி மற்றும் அணையில் அதிகளவு சதுப்பு நில முதலைகள் காணப்படுகின்றன.
அணையிலிருந்து நீர் திறக்கும் போது, தவறி ஆற்றில் வரும் முதலைகளால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ஆற்றின் வழியோரத்திலுள்ள மக்கள், குடிநீர், பொது உபயோகத்திற்கும், இரு மாவட்ட விவசாயிகளுக்கும் அமராவதி ஆறு ஆதாரமாக உள்ளது. மேலும், ஆற்றின் கரையோரத்தில், ஏராளமான கோவில்களும் உள்ளன.
அமராவதி அணைக்கு அருகில் அமைந்துள்ள கல்லாபுரம் கிராம பகுதியில், ஏராளமான முதலைகள் பல ஆண்டுகளாக வசித்து வருவதோடு, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து பல்கி பெருகியுள்ளன.
தற்போது அவை பரவி, கொழுமம், கண்ணாடிபுத்துார், மடத்துக்குளம், கணியூர், கடத்துார் ஆற்றுப்பாலம் என பல பகுதிகளில் காணப்படுகின்றன. நேற்று முன்தினம், கடத்துார் ஆற்றுப்பாலம் பகுதியில், மக்கள் செல்லும் இடத்திலேயே முதலை காணப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆற்றுக்குள் இறங்க வேண்டாம், என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதே போல், அமராவதி ஆற்றில் வசிக்கும் முதலைகள், ஆற்றுக்கு செல்லும் பொதுமக்களை எதிர்பாராத விதமாக தாக்கி வருவதால், ஒரு வித அச்சத்துடனே கிராம மக்களும், கரையோரத்திலுள்ள விவசாயிகளும் வசிக்கும் நிலை உள்ளது.
பல ஆண்டுகளாக இப்பிரச்னை வழியோர கிராமங்களில் நீடித்து வரும் நிலையில், வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து, அமராவதி ஆற்றிலுள்ள முதலைகளை பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியிலுள்ள நீர் நிலைகளில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

