/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிலை ஆக்கிரமிப்புகளால் அச்சம்
/
நீர் நிலை ஆக்கிரமிப்புகளால் அச்சம்
ADDED : நவ 01, 2024 12:52 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி எல்லையில் நீர் வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் சுணக்கம் நிலவுகிறது. இதனால், மழைக்காலத்தில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பூரின் மையத்தில், நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. சேனாப் பள்ளம், மந்திரி வாய்க்கால், ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை ஆகியவற்றின் நீர், நொய்யலில் கலக்கிறது.
பல ஆண்டுகளாக நொய்யல் கரையில் அணைமேடு முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரை பல இடங்களில் வீடுகள் கட்டி பலரும் வசித்து வந்தனர். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த கோர்ட் உத்தரவையடுத்து இவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலமாக நொய்யல் கரையில் வசித்து வந்த 500க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளத்தில் சில பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தகுதியானவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.
அதே சமயம் சத்யா காலனி, வாய்க்கால் மேடு, சாயப்பட்டறை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.
மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றிலும், ஓடைகளிலும் அதிகளவில் நீர் வரும் போது, கரையை ஒட்டி பாய்ந்து செல்கிறது. இது போன்ற சமயங்களில் பெரும் அசம்பாவிதம் காத்திருக்கிறது.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் இன்னும் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கோர்ட் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து உரிய எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசியல் அழுத்தம் காரணமாக அகற்றப்படாமல் உள்ளன; வாய்க்கால் கட்டுமானம், மழை நீர் வடிகால் கட்டுமானம் ஆகியனவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறிந்து உரிய விதிகளின் படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பிரச்னை ஏற்படும் போதும், ஏதாவது ஒரு வகையில் அரசியல் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க இயலாமல் அதிகாரிகள் கைகள் கட்டப்பட்டு விடுகிறது. பாதிப்பு ஏற்படும் போது அதிகாரிகளே சென்று அவர்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படுகிறது.
- அதிகாரிகள் தரப்பு.
மாநகராட்சி எல்லையில் இருந்த பெரும்பாலான நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றி, அங்கு வசித்த குடும்பங்களுக்கு அடுக்கு மாடிக்குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அடுக்குமாடிக் குடியிருப்பு குமரன் காலனியில் 'செகண்ட் பேஸ்' வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. கட்டுமானம் நிறைவடைந்தவுடன் தகுதியானவர்களுக்கு வீடுகள் வழங்கி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும் குடியிருப்புகள் தேவைப்படும் நிலையிலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, அரசிடம் உரிய நிதியுதவி பெற்று கூடுதல் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஏற்படுத்தவும் யோசனை உள்ளது.
- தினேஷ்குமார், மேயர்.