/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரில் பாதாள சாக்கடை பிரச்னைகளால் அச்சம் குறையவில்லை! ஆளை வீழ்த்தும் ஆளிறங்கு குழி மூடிகள்
/
நகரில் பாதாள சாக்கடை பிரச்னைகளால் அச்சம் குறையவில்லை! ஆளை வீழ்த்தும் ஆளிறங்கு குழி மூடிகள்
நகரில் பாதாள சாக்கடை பிரச்னைகளால் அச்சம் குறையவில்லை! ஆளை வீழ்த்தும் ஆளிறங்கு குழி மூடிகள்
நகரில் பாதாள சாக்கடை பிரச்னைகளால் அச்சம் குறையவில்லை! ஆளை வீழ்த்தும் ஆளிறங்கு குழி மூடிகள்
ADDED : செப் 21, 2025 11:08 PM

உடுமலை; நகர பிரதான ரோடுகளில், ரோட்டை விட உயரமாக அமைந்துள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள் சேதமடைந்துள்ளதுடன், அக்கட்டமைப்பை சுற்றிலும் குழி அதிகரித்து வருவதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. அனைத்து ரோடுகளிலும், ஆய்வு செய்து பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகளை சீரமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும், சுகாதாரத்தை மேம்படுத்த, பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் வடிகால் வாரியத்தால், 2013ல் துவங்கியது.
நகரில், 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள், 3,900 ஆளிறங்கும் குழிகள் மற்றும் நாள் ஒன்றுக்கு, 7.81 எம்.எல்.டி., கழிவு நீர் சுத்திகரிக்கும் திறனுடன் சுத்திகரிப்பு மையம் என, திட்டத்துக்கு, 56 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. கடந்த, 2015ல், வீடுகளுக்கு இணைப்பு வழங்கினர்.
திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, பல்வேறு பிரச்னைகளை மக்கள் சந்தித்தனர். இணைப்பு வழங்கிய பிறகு, அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்து விடுவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து, நகராட்சி நிர்வாகத்திடம் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்ட பிறகு, குறிப்பிட்ட இடைவெளியில், அடைப்பு குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிவு நீர் அகற்றும் இயந்திரம் வாயிலாக கழிவு நீரை உறிஞ்சி, அடைப்புகளை அகற்றுகின்றனர். ஆனால், நகரின் முக்கிய ரோடுகளில், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது.
பல இடங்களில் ரோட்டை விட, அதிக உயரத்தில், ஆளிறங்கு குழி மூடி அமைந்துள்ளது. குறிப்பாக, கொழுமம் ரோடு சந்திப்பு முதல் கொல்லம்பட்டரை வரை தேசிய நெடுஞ்சாலையிலும், தாராபுரம், பல்லடம், செஞ்சேரிமலை ரோட்டிலும் இப்பிரச்னை உள்ளது.
மேடாக இருப்பதால், அப்பகுதியை விட்டு விலக்கி, வாகனத்தை இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் இயக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.
நகரில், ராஜேந்திரா ரோடு, நேரு வீதி, சீனிவாசா வீதி, சரவணா வீதி உள்ளிட்ட பிரதான ரோடுகளில், மூடி சேதமடைந்து காணப்படுகிறது. பராமரிப்புக்காக மூடியை எடுக்க, சுற்றிலும் குழி எடுத்து விட்டு, அப்படியே விட்டு விடுகின்றனர்.
இதனால், மூடியை சுற்றிலும் பெரிய குழி ஏற்பட்டு, இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டின் மத்தியில் இந்த குழிகள் இருப்பதால், வாகனங்கள் விலகிச்செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது.
போக்குவரத்து அதிகம் இல்லாத ரோடுகளில், முற்றிலுமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில்லை. சில இடங்களில், மூடி உடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
'அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அனைத்து வார்டுகளிலும், ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற வேண்டும்; ரோட்டை விட மேடாக அமைந்துள்ள இடங்களில், மூடிகளை சீரமைத்து, சுற்றிலும் சிமென்ட் பூச்சு அமைக்க வேண்டும்,' என நீண்ட காலமாக வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.