ஓட்டுப்பதிவுக்கு தயாராகும் இயந்திரங்கள்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
ஓட்டுப்பதிவுக்கு தயாராகும் இயந்திரங்கள்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 17, 2026 08:26 PM
உடுமலை: தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ல் நடக்கிறது. உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில், ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் மற்றும் வேட்பாளர் விபரங்கள் அடங்கிய 'ஓட்டுச்சீட்டு' (பேலட் ஷீட்) பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
உடுமலை தொகுதியில், 307 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியில், 294 ஓட்டுச்சாவடிகளிலும், ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, உடுமலை தொகுதிக்கு, 368 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 399 விவிபேட் இயந்திரங்களும், மடத்துக்குளம் தொகுதிக்கு, 352 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 382 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
உடுமலை தொகுதிக்கு, உடுமலை அரசு கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இப்பணிகள் நடக்கின்றன.
'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள், தொகுதிக்கு இருவர் வீதமும், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரங்களில் புதிய மின்கலன்கள் பொருத்தப்படுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படம், பெயர் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகள் முறைப்படி பொருத்தப்படுகின்றன.
வாக்காளர் தனது வாக்கினை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்களில், வேட்பாளரின் சின்னம் மற்றும் காகிதச் சுருள்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வரும் 22-ம் தேதி இந்த இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படும். 23-ம் தேதி காலை ஜனநாயகக் கடமையை ஆற்ற மக்கள் தயாராகும் வேளையில், அனைத்து இயந்திரங்களும் செயல்படத் தொடங்கும் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
