/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்தமாகும் நெடுஞ்சாலை மையத்தடுப்பு; அலங்கோலப்படுத்தினால் அபராதம் விதிக்கணும்
/
சுத்தமாகும் நெடுஞ்சாலை மையத்தடுப்பு; அலங்கோலப்படுத்தினால் அபராதம் விதிக்கணும்
சுத்தமாகும் நெடுஞ்சாலை மையத்தடுப்பு; அலங்கோலப்படுத்தினால் அபராதம் விதிக்கணும்
சுத்தமாகும் நெடுஞ்சாலை மையத்தடுப்பு; அலங்கோலப்படுத்தினால் அபராதம் விதிக்கணும்
ADDED : ஜூலை 10, 2025 11:20 PM

திருப்பூர்; திருப்பூர் தேசிய நெடுஞ்சாலைக்குட்பட்ட அவிநாசி - கோவை ரோடு, திருப்பூர் நகரப்பகுதிகளில் உள்ள சாலையில், மையத்தடுப்பு சுவரை, சுவரொட்டிகள் ஆக்கிரமித்திருந்தன. நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, சுவர்கள் வர்ணம் தீட்டி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அவிநாசி - திருப்பூர், ஈரோடு, கோவை நெடுஞ்சாலையில் தினமும், பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சாலையின் மையத்தடுப்பு சுவற்றில் அரசியல் கட்சியினர், அமைப்பினர், வர்த்தக நிறுவனங்கள் சார்பில், அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால், மையத்தடுப்பு முழுக்க அலங்கோல நிலையில் காட்சியளிக்கிறது; இந்நிலை, தொடர்ந்து நடந்து வருகிறது.
சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவோருக்கு சட்டத்தில் அனுமதியுள்ளது போன்று, அரசு சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டுவதும் சட்டப்படி குற்றம் தான். மக்கள் வரிப்பணத்தில் தான் மையத்தடுப்பு சுவர்கள், சுத்தம் செய்யப்படுகின்றன. ஆனால், அரசியல் கட்சிகள், அமைப்பினர் தங்களின் சுய லாபத்துக்கு அரசு சுவரை பயன்படுத்தி, சுவரொட்டி ஒட்டுவதும் சட்டப்படி தவறுதான் என்கின்றனர் நகர்நல விரும்பிகள்.
நடவடிக்கை எடுக்கணும்
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா கூறியதாவது:சாலையின் நடுவில் உள்ள மையத்தடுப்பில், வெள்ளை மற்றும் கறுப்பு நிற வர்ணம் பூசுவது, விபத்து தடுப்பு நடவடிக்கையின் ஒரு செயல் தான். இரவில், சாலையில் வரும் வாகனங்களுக்கு மையத்தடுப்பு தெளிவாக தெரியும் என்பதால், விபத்து தவிர்க்கப்படும். அதன் மீது, சுவரொட்டி ஒட்டுவது, சட்டப்படி குற்றம்.
சுவரொட்டி மட்டுமின்றி, மாநில, தேசிய நெடுஞ்சாலையோரம் விளம்பர பிளக்ஸ் வைப்பதும் கூட, வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, விபத்துக்கு வழி வகுக்கும். எனவே, தான் ஐகோர்ட் கூட, இத்தகைய செயலை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, வரும் நாட்களில், மையத்தடுப்பில் சுவரொட்டி ஓட்டுவோர் மீது, நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

